திருவிழாக்கு வந்த ஒரு தேவதைதான் அவளா...?
தாவணிக்குள் புகுந்துகொண்ட செந் தாமரை மலரா...?
கால்முளைத்து நடந்துவரும் மின்னும் தங்கத் தேரா...?
என் இளமை வெல்லத் திட்டமிடும் மன்மதனின் போரா...?
படையெடுக்கும் அவளழகால்... என்னை வெல்லுவாள் !
உடையுடுத்த முழுநிலவே... மண் வந்த சேதி சொல்லுவாள் !!
சிறுகுழந்தைப் புன்னகையால்... என் மனதை அள்ளுவாள் !
தன் கன்னக் குழிக்குள் செல்லமாக.... என்னைத் தள்ளுவாள் !!
அவள் வதனம் பார்த்து நாணி... பூக்களும் தலையைக் கவிழ்க்கும் !
தென்றல் கூட கயிறு திரித்து... அவளைக் கட்டி இழுக்கும் !!
முன்றல் நிறைந்த கண்களெல்லாம்... அவள் பக்கம் குத்தி நிலைக்கும் !
மன்றம் வந்து ஆடும் அழகாய்... அவள் கூந்தல் காற்றில் மிதக்கும் !!
நீலவானக் காகிதம் எடுத்து... வண்ண வானவில் பேனா தொடுத்து...
வெண்மையின் அத்தனை நிறங்களும் இணைந்து,
இவள் பெண்மையின் அழகினை வரையும் !
அவள் மென்மை அறிந்து வெட்கப்பட்டு ....வெண்மேகங்கள் ஓடி மறையும்!
சுற்றி வரும் சாமியை மறந்து.... அவளின் பின்னால் சுற்றியவன்,
"கண்ணைக்குத்தும் சாமி" என்று.... நண்பன் சொன்னபோதும் முறைத்தவன்,
கூட்டத்தில் எட்டியெட்டி அவளைத் தேடி... தன்னையே தொலைத்தவன்,
இன்று..... கடந்தகால நினைவுகளில் தன்னைத்தானே தேடுகிறான் !!!
*********** *********** *********** *********** *********** ***********
குறிப்பு :
ஊர்க்கோயில் திருவிழாக்களில் பதின்ம வயதுக் கனவுகளோடு... உள்ளூர்த் தேவதைகளை தரிசித்துத் திரிந்த...பழைய இனிய நினைவுகளின் மீட்டல்களை எடுத்து.... என் 'கால வேலி' களின் கதிகால்களை கவிதைவரிகளாய் நட்டுவைத்திருக்கின்றேன் .... ! அவ்வளவுதான் ...!! :)
உங்களின் 'கால வேலி'க்குள் புகுந்து என் 'கற்பனை ஆடு ' மேய்ந்திருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல...! ;) lol
- ஒருவன் ~ கவிதை -