Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

28 ஆக., 2011

என்னடா வாழ்க்கையிது...???


என்னடா வாழ்க்கையிது??????? 
அடிக்கடி வாயில வாற வார்த்தை இது!
உண்மையில் அதுதான் உண்மை!
ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை!

என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில
என் தலையிலதான் வந்து விழுகுது!
நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ...
எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!!

தன் கதை வசனத்துக்கு...  என் தலையில,
தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை
இன்னும் தேடுகின்றேன் நான்!
என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!!
"கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்!
உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்!
சேர்த்துச் செய்துவிட்டு...
 நான் போகின்றேன் நரகத்துக்கு!!!
இந்த உலகத்தில் வாழுவதைவிட.... நரகம் எவ்வளவோ மேல்!!!

23 ஆக., 2011

போராடிப்பார்....!!! குழப்பம் இருக்காது...!!!

எனக்கு என்னாயிற்று...? என்ன நடக்குது...?
ஒன்றுமே புரியவில்லையே...!
எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!!
அனைத்துமே புரியாத புதிர்களாய்!!!

சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும்,
நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்;
அம்மா சொன்னா...!?

பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும்,
நன்றாகத்தான் படிப்பேனாம்;
ஆசிரியர்  சொன்னார்கள்...!?

வேலை செய்யும் இடத்தில் கூட,
நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்;
எல்லாருமே சொல்கின்றார்கள்...!?

எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்...
அது எனக்கே தெரியும்!?

இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!?
அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ???

என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம்,
எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை.
என்னைத் தவிர எதைச் சிந்தித்தாலும்...
என்னவோ ஆகுது எனக்குள்...!?
அது கோபமா... குழப்பமா... இல்லை பைத்தியக்காரத்தனமா ???
தெரியவில்லை எனக்கு!

என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும்...
சிறு இதயமும்... பெரும் மூளையும் எனக்குள் இல்லைப் போல...!
இருந்திருந்தால், பெரும்பாலான பூவுலக வாசிகள் போல்...
நானுண்டு என் வேலையுண்டு என்றிருந்திருப்பேன்!

யாரோ சமைக்கும் உணவை ருசித்தபடி,
மற்றவர் அழுகுரல்களினை ரசித்தபடியே,
அவர்களின் கண்ணீரிலும் செந்நீரிலும்... ஆனந்த நீச்சல் போடலாம்!
ஆடலாம்... பாடலாம்.. என்னவேண்டுமானாலும்... செய்யலாம்!
தற்கால ஆறறிவு உயிரினங்களிடம் "மனிதம்" என்பதற்கான
எந்தவித அடையாளங்களும் இல்லாதபோது...
அதைத் தொலைத்ததற்காக நான் ஏன் குழம்பவேண்டும்???

ஆம்... இப்பொழுது புரிகின்றது! என்னுள் இருந்து யாரோ...
தன் பெயர் "மனச்சாட்சி"... தன்னைக் காப்பாற்றச் சொல்லி
அழுவது... தெளிவாகக் கேட்கின்றது!!!

"மனச்சாட்சி" என்ற ஒன்றைக் காப்பாற்றுவதன் மூலம்,
மனிதத்தினை வாழவைக்கலாம் என்றால்...
அதைக் காப்பாற்றுவதற்காக...
 எந்த ஆயுதத்தினைக் கையில் எடுத்தாலும் தப்பில்லை!
போராடிப்பார்....!!! குழப்பம் இருக்காது...!!!

"மனிதம்" வாழ ... உங்கள் மனச்சாட்சியை சாகடிக்காமல் இருந்தாலே போதும்!

17 ஆக., 2011

தூங்காத நினைவுகள்...

நிலவுக்கு விடைகொடுத்த பின்னும்,
தூங்காத விழிகளுடன்...  மனதில் பாரத்துடன்...
கனவுகளும் வெறுங் கனவாகிப்போக,
உன் நினைவுகளை மீட்டியபடி...
வளர்ந்து தேயும் நிலவுகளோடு,
அமாவாசையானது என் ஆசைகளும்!

12 ஆக., 2011

கொம்பு முளைத்த மானிடங்கள்


இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும்,
 பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்!
அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!!
அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!!

அவர்களை  நினைத்தாலே போதும் ...
ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும்.
அதை விட்டால் வேறொன்றும் வராது!?     வராதா....????!!!!
அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான்.
அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான்.
வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு.
வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும்.

என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய்  பார்த்திருக்கின்றோமா?
பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் ,
காலையிலெழுதலும் காலைக்கடன்களின்பின் பொழுது களித்தலும் ,
சொந்தமும் பந்தமும்...  ஆதியும் அந்தமும் என,
அத்தனை இயற்கையையும் கொண்டவர்களாய்...
என்றாவது நாம்,    நினைத்தாவது பார்த்திருக்கின்றோமா?

நாம்தான் அவர்கள் தலையில் கொம்பு வைக்கின்றோம்!
கடைசியில்... அந்தக்  கொம்பில், 
குத்துப்படுவதும் நாங்கள்தான்...!
குதறப்படுவதும் நாங்கள்தான்...!!

ஏறவிட்ட படிகளும் அரியாசனங்கள்தான்!
இதை நாம் உணரப்போவது எப்போது........??????????

9 ஆக., 2011

என் மனசுக்குள்ள கொஞ்சம்...

என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம்,
நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்!
வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!!

எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில்,
முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்!
அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே
பெருப்பித்துக் காட்டுகின்றன!
எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி...
கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது!

அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன்,
களைத்துப் போகின்றேன்... !  ஏனென்று புரியவில்லை!?
பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்...
ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன!
என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்...
மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ்வளவோ சந்தோசமாய்த் தெரிகின்றன!

ஒற்றைப் பையில் நாலு தாள்கள் என்னிடம்!!
இங்குள்ள நாய் கூட என்னைப் பார்த்துக் குரைக்கும்!!!
மேலும் கீழுமாய் நாலு பைகளிலும்...
கட்டுக்கட்டாய்  வண்ணத் தாள்களும்..
கீறல் படாத கடனட்டைகளும்..
நாலு சில்லுடனும்... உள்ளே ஜில்லுடனும்...இடமிருந்தால்...
 நாலுபேர் வந்து தோளில் சுமக்கும்..
மண்மீது வாழ்ந்துகொண்டு...கண்ணீரைக் குடித்தபடி,

உண்மையாய் சுமப்பதற்கு நாலுபேரைக் காண்பதற்கு ...
என் நிலம் வேண்டும் எனக்கு!!!

7 ஆக., 2011

உன்னோடு ஒரு இரவு

உணர்ச்சியலைகள் அடித்தோய்ந்த பின்பும்
உன் கரையில் மணலையள்ளி வருடியபடி
வெண்ணிலா உன்னை ரசித்திருப்பேன்!
கடல் மீண்டும் கரைதொடும்...
நிலவு மீண்டும் வானம் வரும்... என்ற எதிர்பார்ப்புடன்,
வெற்று வானத்தை பார்த்தபடி...
சுடுமணலில் நான்!

6 ஆக., 2011

காதல் யுத்தம்


கைக்கு எட்டாத வானமாய் - என்
கண்களில் தெரிகின்றாய் நீலமாய்!
தொலைதூர நோக்கங்கள் எதுவுமில்லை,
தோலுரித்த இசைகளைத் தவிர!
உன் புன்னகைக்குள் விழுந்து கிடக்கும் வீரனாய், 
இன்னும் இருக்கின்றேன் உயிருடன்!
உன் கண்கள் இன்னும் என்னைச் சீண்டுகின்றன...
கூர்மையான வாளுடன்!
கொஞ்சமேனும் தள்ளிப்போடு யுத்தத்தை,
நான் போராட என்னுயிர் வேண்டும்! 
அதுவும்....  நீதான்!

4 ஆக., 2011

நான்கு வரிக் காதல்

உள்ளம் பேதலிக்க...  எண்ணம்  கொடு!
என் வாழ்விலும்... வண்ணக் கோலமிடு!
எல்லை மீறும்போது... என்னைத் தடு!
"கொஞ்சக்" கனவிலேனும்... என்னை விடு!

2 ஆக., 2011

புரிதல்களும் புரியாமையும்


அறுத்தெறியப்பட்ட இதயத்தின் இரத்தக் குழாய்கள்
கொப்பளித்த சிவப்பணுக்களில் - என்
உயிர் உச்சரித்த உன் காதற் சிதறல்களைத்
தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும்!
புரிதல்களும் புரியாமையும் புரிந்துகொள்ளப்படுவதற்கு 

சில காலங்கள் செல்லும்!- அதுவரை
இந்த ரணவலித் தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!!!