Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

8 மார்., 2012

வலிகளின் வானவில்


விரிந்து கிடக்கிற நீல வானத்தில்...
வெண்முகிலாய் என் எண்ணங்கள்... வேகமாய் ஓடி மறைய,
சட்டென உருவான இடிமின்னலில்...
அழுதுகொண்டே.... விழுகின்றேன்!

மீண்டும் நான் வானவில்லாய்... வண்ணங்களோடு!
வண்ணங்களை கொடுத்துச் சென்ற...
கருமுகில்களுக்கு நன்றி! :)

7 மார்., 2012

எதைத் தேடி அலைவது....???


சட்டெனத் தூறிய மழைத்துளியில்,
முற்றாக நனைந்து போனேன்...!
சாயம் போனவன் போலாகி... - காயமாகி,

அம்மணமாய் அழுது நின்றேன்!

 
வழமையாய்... நான் பேசினால்,
பத்து ஊருக்கு பவ்வியமாய்க் கேட்கும்...!
ஆனால், பேச இயலாத ஒருவனாய்... - அகதியாய்,

எங்கேயோ தொலைந்து போனேன் ..!

 
என் தாயின் முகம் மலர...
மாற்று நாமம் சூடிக்கொண்டேன்!
பல முகமூடி போர்த்திக்கொண்டேன்...! - ஆனால்,

உண்மையான என் முகம் தொலைத்து நின்றேன்!

 
நெருப்பாய் இரு... எரிக்காதே!
கனலாய் இரு ...கருக்காதே!
கருத்தாய் இரு.... வருத்தாதே!!! - இறுதியில்,

அர்த்தமற்ற பிழையாய் ... நின்றேன் !



என் மானங்காக்க.... அழகாய் உடுத்திக்கொண்டேன்!
என் பெண்டிர் விருப்பம்போல்.... வாங்கிக் கொடுத்தேன்!!
ஆனால், என் தாயவள் கற்பிழந்து நிற்க....


என் கழுத்திறுக்கும் கருத்துக்களோடு...
நெற்றிப்பொட்டினை துளைக்கத் துடிக்கும் பேனா முனைகளோடு...
மற்றவர் முன் அம்மணமாய்.... அருகதையற்றவனாய்,

தரையில் விழுந்த மீனைப்போல...
பாழ்பட்ட வலையில்... பிடிபட்ட மீனாக...
துடிக்கத் துடிக்க... உங்களுக்கு விருந்தாகின்றேன்!
பசியாற நீங்கள்...... உண்ட உணவாகின்றேன்!

பயம் தொடாத நிலத்திலிருந்து.... பத்தும் பேசலாம்!
பத்து ஜென்மம் எடுத்தாலும்... பேசாத ஜென்மங்களும் ,
பாவம் பழி புரியாத ... பாக்கியசாலிகளும்,
பத்திரமாய்.... அங்கேதான் இருக்கின்றார்! என்ன செய்தார்???

நிஜம் என்பது எப்பவுமே சுடத்தான் செய்யும்!
சுட்டவரின் நிஜத்தினை .... சூடாய் வரிக்கத் தயங்குவதேன்?!


காலம் என்பது எம்மை, சிலமுறைதான்...... தன்பால் அழைக்கும்!
மறுபிறவியில் நீங்கள்... மாற்றினத்தில் பிறக்கலாம்!
இம்முறையேனும் நேர்மையாய் இருங்கள் ... உங்களுக்கேனும்!

உங்கள் உறவுகளின் அழுகுரலுக்கான ...
எங்கள் குரல்கள், எங்கே ஒளிந்துகொண்டன....???!


எதைத் தேடி அலைவது...???
அழிவுகளின் தடயத்தினையா? அல்லது... உங்கள் உரிமைக் குரலினையா?


தயவுசெய்து பதில் தேவை... !!!

2 மார்., 2012

நூலறுந்த பட்டங்கள்...!


அடித்த மணியோசையும், தபால்காரரும்.... கொடுத்த சந்தோசம்,
தற்காலிக ஆறுதலாய்... வாசித்து முடிக்கும் வரைக்கும்தான்!
அதன்பின்னர்தான்.... தபால்காரரின் புன்னகைகூட,
உண்மையான புரிதலென்று புரிந்தது!

என் மகனே! அன்றொருநாள் எனக்கென நீயனுப்பிய காசு...
இன்னமும் மிச்சமிருக்கு ராசா...!!!
என் பேரப்பிள்ளைகளுக்கு... என்ன வேணும் சொல்லு ராசா?
வாங்கி அனுப்புறன்... என்னெண்டாலும்!!!

எத்தனை நாளைக்கு நானிருப்பன்... எனக்கே தெரியாது!
ஆனாலுன் அக்கா தங்கச்சி பிள்ளைகள் ... அவங்களின் வாரிசுகள்,
எல்லாமே இங்குதான் சீவிக்குங்கள்... சிந்தியுங்கள்!
"தாய்" எனும் நிலையிலிருந்து ... தாய் மண்ணிலிருந்து...
 என்  இறுதி  வார்த்தைகள்!!!

உன் அப்பா கட்டிய.... எங்கள் வீட்டை வித்துப்போட்டு,
விமானமேறச் சொன்னது.... உனக்கு பாசமாகத் தெரியலாம்!
"முடியாது".... என்று சொன்னதன் பின்னால், பேசாமல் போனியே ராசா!
பாசமென்பதும் காசுக் கணக்குத்தானோ....???

இன்னும் ஒலிக்காத அழைப்போசைகளுக்காக...காத்துக்கிடக்கும்,
ஆசையாய் வாங்கித்தொலைத்த 'கையளவு' பேச்சாளரும்,
வாசல்வந்து மணியடிக்காத தபால்காரரும்.....என் மனவெதும்பல்களில்,
ஊமையாய்... அடங்கிப்போகின்றார்!

சில ஆயிரம் மைல்தூரம் என்பது...
பல்லாயிரம் மாற்றங்களை........ மனித மனதினினுளும்,
ஆழமாய்த்தான் விதைத்து விடுகின்றதோ...???
புலம்பெயர்ந்தபோதே.... உறவுகளும் பெயர்கின்றன போல!

'உறவுகள்' என்பது ... விடைதெரியாத விடுகதையாக,
தொடர்கதையாய் .... தொடரும் நிலையில் ஒருநாள்,
தொப்புள்கொடிகள் அறுந்துபோன... குழந்தைகளும் தாய்மாரும்,
எம் மண்ணிலும்... அநாதைகளாகக் கிடக்கலாம்!

22 பிப்., 2012

தன்னந்தனியே... துரத்தும் தனிமைகள் !!!

நான் நடந்த திசைகளின் பாதைகளில்...
துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்!
கண்ணுக்கெட்டிய தூரம்வரை...  வெறுமை மட்டுமே,
என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!!

தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற...
காலங்கள்கூட,  என் நிலைமையைப் பார்த்து கலங்கியிருக்கும்!
கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு...
கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்...
உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!!

சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது,
என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்!
கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்!
என் உடலினை... என் கால்களே சுமந்தாலும்,
மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்...
கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!!

பணமும் குணமும்.... வெகுதூரத்தில் உள்ள எதிரிகளாய்த் தெரிய,
உறவுகள் எல்லோரும் என்னருகே.... அன்பாய் இருப்பதுபோல்,
வழியனுப்பிய பயணங்களின் இடைவழியில்...
'அநாதை' என்றொரு சொற்பதம் தாண்டிய வலிகளோடு...
உண்மையான ஒரு அன்புக்காய் மட்டும்..... யாசிக்கின்றேன்!!

இது கவிதை சொல்லும் கவிதையல்ல...!
கற்பனைகளின் கதையுமல்ல...!!
தனிமை எனும் கொடுமைக்குள்...
எல்லைதாண்டிய சிறைவாசம்!!!
ஒவ்வொரு நாளாய் எண்ணிக்கொண்டிருக்கின்றது,

தனிமையின் வரிகள்....     விடுதலைக் கவியெழுத!!!

10 நவ., 2011

நிலவைத் தேடி...

என் ஊரில் முற்றத்து நிலவு என்னைத் தேடித் தவிக்க,
ஊரைவிட்டு வந்த நான்... நிலவைத்தேடி,
கண்கூசும் மின் விளக்குகளோடு அலைகின்றேன்...
முகவரியில்லாத தேசமொன்றில்!!!

அம்மாவின் நிலாச்சோறும், மண்வாசனையும்...
அடிக்கடி அனுப்பும்... அன்பான அழைப்பிதழ்களையும்,
என் சூழ்நிலைக் காவலர்கள்... என் மன குப்பைக் குழியில்,
அப்போதே போட்டுப் புதைக்க... இருட்டு மட்டுமே துணையாக!!

இன்னும் நிலவைத் தேடியபடி.... நான்,
முகவரி தெரியாத பயணத்தில்... பசியோடு!