Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

21 ஜன., 2016

ஊடல் - கூடல்


 


காற்றில் குமிழி ஊதும் சிறு குழந்தைபோல...
உன் காதிலும் பல கதைகள் சொல்கிறேன்!
நீற்றில் நிலவும் நிலாமுகில் புகையாய்,
என் வாழ்விலும்  நீதான் உலா வருகிறாய்!


வா வா எனும்போதும்.... தள்ளிப்போகிறாய்...!
போவெனச் சொல்லா....
வார்த்தைகளையும் அள்ளித் தருகிறாய்!!

ஏனடி இப்படி அலைக்கழிகிறாய்...???
 
களைத்துப்போய்....
உன் கழுத்துக்குள்தானே சாயப்போகிறேன்!
அப்பொழுதுமட்டுமேன்.... 

அப்படி அணைத்துக்கொள்கிறாய்???

நீ நிலா... நான் வானமா...? - இல்லை,
நீயில்லா வானத்தில்...
நிலாதான் உலாவுமா???


© ஒருவன்

24 ஆக., 2015

நீயும் நானும்...




உனைத் தொடவே...
எனக்குள்ளே கரைந்து போனவள் நீ...!

எனைத் தேடாதே...
உனக்குள்ளே தொலைந்து போனவன் நான்...!!


© ஒருவன்

தேவதைகள் இப்படித்தான்...!



சிறகினை உதிர்த்துவிட்டும்...
வானில் பறந்திட முடியுமென்று,

நீதானே சொல்லித் தந்தாய்...
!


மரபினை உடைத்து விட்டு...
புதுக் கவிதைகள் பிறக்குமென்று,
உன்னழகாலே மெல்லச் சொன்னாய்...!
!

உறவினை பிரிந்த பின்னும்...
நினைவுகள் விரியுமென்று,
சொற்தீயால் சுட்டுச் சென்றாய்...!!!


கனவினை கலைத்திட்டும்...
உணர்வுகள் திரியுமென்ற,
காதற் தூக்கத்தில் என்னைக் கொன்றாய்...!!!!


© ஒருவன்

16 மார்., 2015

உனக்காக...

                                  



சுடும் மழைக் காலம்...  குளிர் வெயிலாய் நீ வந்தாய் !
இலையுதிர்கால.... வெளிர்ப் பூவை நீ தந்தாய் !!
மனதிழை ஓடும்.... மெல்லிசையாய் உன் பெயரை,
இதழிடை  பாடும்.... இன்னிசையாய்  நீ அமைந்தாய் !!!


கனதரம் நினைத்திடும்... கணங்களும் இனித்திடும்...!
நிரந்தர வதிவிடம்...  மனங்களும் கொடுத்திடும்...!!
சிலதரம் பார்த்திடும்...    நால்-விழிகளும்  கலந்திடும்...!
வெண்ணிலா வெட்கத்தில்... மெல்லமாய்ச் சிவந்திடும்...!!


எங்கே நீ சென்றாலும்... 
என் நினைவும் பின்னால் அலையுமடி..!
அங்கே  வானவில் வீடு கட்டி...  

உனக்காய் வாசல் வரையுமடி... !!

உந்தன் குரலைக் கேட்டு... மெல்லப் பூக்கள்  பூக்காதா... ?
பூமொட்டு விரியும்  தாளம் எந்தன்..... காதில் கேக்காதா... ??
என் கைகள் தொட்டுச் செல்லும் மேகம்....  கொஞ்சம் நிக்காதா..?
உன் புன்னகை சொட்டும் தேநீர்க் கிண்ணம்.... எனக்காய் இனிக்காதா...??


எனக்கே எனக்கென எனக்காக...  உனையே தந்தாய் எனக்காக!
உயிரென உணர்வென உனக்காக.... என் காதலை தந்தேன் உனக்காக!!
வருவாய் தருவாய் வரமாக   .... உனதாய் எனதாய்... எமதாக !
உனக்கே உனக்கென  உனக்காக...  எனையே தருவேன் எமக்காக...!!

**********              **********             **********            **********           **********

                                                      © ஒருவன்








21 டிச., 2014

கள்ளி...!




பெண்ணே.. பெண்ணே...   காதல் கொண்டேன்
உந்தன் கண்ணில் மின்னல்  கண்டேன்
உன்னால்தானே  தூக்கம் மறந்தேன்
விண் மேகம்போல நானும் மிதந்தேன்


செல்லமாய்ச் சிரிக்கிற தேவதையே...!
வெல்லமாய் இனிக்கிறாய்  மனசுக்குள்ளே...!!  

கனவில் கன்னங் கிள்ளிப் போறவளே...!
என் நினைவை அள்ளிக்கொண்டு போறாய் புள்ள...!! 



வெண்நிலவாய் நெருங்கி வருவாயா...?
காதல் சொல்லித் தருவாயா?
இல்லை... வேண்டாம் என்று மறைவாயா?
என் இதயம் திருடித் தொலைவாயா? 
 


கண்ணே.. கண்ணே... என்னோடு சேர்ந்துவிடு !
என் காதல்.... நீ என்று... சொல்லிவிடு !
நீ அன்றி நான் வாழும்    என் வாழ்வில்
அர்த்தங்கள்  இல்லை என்று... புரிந்துவிடு !

வாழ்வில் வண்ணக் கோலம் நீ போட...
இதயம்  சின்னச் சின்னத் தாளமிட...
என் பக்கம் ஓடி நீ வாடி...
உன் மடியில் நான் சாய...!


போகாதே பெண்ணிலவே தூரத் தூர...
என் மீது காதல் சாரல் தூறத் தூற...
நீ வேண்டும் என்னருகில் நெஞ்சம் ஆற...
நம் காதல் என்றென்றும் சேர்ந்து வாழ...
உன்னோடு நான் சேர்ந்து வாழும் காலம்
அதுதானே என்  வாழ்வின் வண்ணக்கோலம்


குறிப்பு:

"கள்ளி" இசை அல்பத்துக்காக எழுதிய பாடல் வரிகளிலிருந்து கவிதை வடிவமாக மாற்றப்பட்டிருக்கிறது.