Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

24 ஆக., 2013

புரியாத பிரியம்...!



என் கண்ணீரில்
கப்பல்விட்டு விளையாடுகிறாள்!
அந்தக் கப்பலைப்போலவே...
நனைந்து பாரமாகிறது என் மனசும்!
என் மனதின் மழைக்காலங்களில்...
அவள் நனைந்து பூரிக்கின்றாள்!
இடியும் மின்னலும் நிறைந்த கார்மேகமாய்,
என் வாழ்வும் வேகமாய் ஓடிப்போகிறது!

 

என்னைப் படுத்தும் காலங்கள்...
அவளைமட்டும் ஒன்றுமே செய்வதில்லை!
வரவிருக்கும் வசந்தத்தையும்...
வண்ணத்துப் பூச்சிகளோடும்
பூத்துக் குலுங்கும் பூக்களோடும்
அவள் இரசிப்பாள்!
அதிகாலைப் பனித்துளிகள் போல...
கொஞ்சங்கொஞ்சமாய் நான் மறைந்து போவேன்!

 

மீண்டும் ஒரு மழை வரும்...!
அந்த மழையிலும் அவள்
கப்பல்விட்டுச் சிரிப்பாள்!
சிரிக்கும் பொழுதில் தோன்றும்
அவளின் கன்ன மடிப்புக்களில்...
நான் அடங்கிப்போவேன்!

 

சிறகடிக்கும் சிட்டுக்குருவியாய்
அவள் சிரித்து விளையாட,
எங்கோ ஒரு மூலையில்...
பாலை நில வெயிலில்...
சின்னக் கால் முளைத்த என் இதயம்
மெதுமெதுவாய் நடந்து போகும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக