Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

13 ஏப்., 2014

வடக்கிலிருந்து சூரியன் உதிக்கிறது...!?




சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி
நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...!
கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து
விளையாடும் பால்நிலவைப் பார்த்து
தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...!
பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது
காற்றடிக்கும் போக்கில்
இங்குவரை கேட்கிறது...!


நேற்று இங்கு நடந்ததை
எத்தனை தடவைதான்
நினைத்து நோவது...?!
அப்படியே தூங்கிவிட்டேன்...!
எனக்குத் தெரியும்...
நான் தூங்குகின்றேன்...
அதை உணர முடிகிறது என்னால்!
கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன...

குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்...
இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!?
நிலவொளியின் வெளிச்சத்தில்
நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்!
சவுக்கு மரக்காடுகளின் நடுவே...
சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்து
முன்பொருநாள் புதைந்துபோன
கரிகாலச் சோழனின் போர்வீரர்கள்
குதிரையில் வருகிறார்கள்!
கனவிலும் மனம் பூரிக்கிறது...!
ஆஹா... விடுதலை !!!


இப்பொழுது எழுகிறேன்...
ஏனென்று தெரியவில்லை!
குதிரைகளையும் காணவில்லை...!!!
என்னால் உணர முடிகிறது!
இன்னும் விடியவில்லை!
பாலுக்கழுத குழந்தை
இன்னும் அழுகையை நிறுத்தவில்லை...
அதே காற்று... அதே சத்தம்!
நரிகளின் ஊளைச் சத்தத்தில்
என் தூக்கம் கலைந்திருக்கலாம்!
ஏதோ ஒரு கனவு கண்டதாய்
ஞாபகம் வருகிறது
அதை நினைக்கும் முன்பே...
வடக்கிலிருந்து சூரியன் உதிக்கிறது!
நான்...
விடிந்துவிட்டதாய் எழுந்து நடக்கிறேன்!!!


**********            **********            **********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக