24 ஆக., 2013
காதலிப்போர் கவனத்திற்கு...!
கனவினைக் கொடுத்து
தூக்கத்தைக் கெடுத்து
பாதியில் செல்வாள் பாவை!
பாதையைத் தொலைத்து
பேதையை நினைத்து
வீதியில் விழுவான் கோழை!
சேலைகள் நினைத்தால்...
சோலைகள் காய்ந்து
பாலைகள் தோன்றும்
வேலைகள் செய்திடும்!
காலைகள் இருண்டு
காரிருள் படிந்து
வாழ்க்கையும் உருண்டிடும் கவனம்!!!
புரியாத பிரியம்...!
என் கண்ணீரில்
கப்பல்விட்டு விளையாடுகிறாள்!
அந்தக் கப்பலைப்போலவே...
நனைந்து பாரமாகிறது என் மனசும்!
என் மனதின் மழைக்காலங்களில்...
அவள் நனைந்து பூரிக்கின்றாள்!
இடியும் மின்னலும் நிறைந்த கார்மேகமாய்,
என் வாழ்வும் வேகமாய் ஓடிப்போகிறது!
என்னைப் படுத்தும் காலங்கள்...
அவளைமட்டும் ஒன்றுமே செய்வதில்லை!
வரவிருக்கும் வசந்தத்தையும்...
வண்ணத்துப் பூச்சிகளோடும்
பூத்துக் குலுங்கும் பூக்களோடும்
அவள் இரசிப்பாள்!
அதிகாலைப் பனித்துளிகள் போல...
கொஞ்சங்கொஞ்சமாய் நான் மறைந்து போவேன்!
மீண்டும் ஒரு மழை வரும்...!
அந்த மழையிலும் அவள்
கப்பல்விட்டுச் சிரிப்பாள்!
சிரிக்கும் பொழுதில் தோன்றும்
அவளின் கன்ன மடிப்புக்களில்...
நான் அடங்கிப்போவேன்!
சிறகடிக்கும் சிட்டுக்குருவியாய்
அவள் சிரித்து விளையாட,
எங்கோ ஒரு மூலையில்...
பாலை நில வெயிலில்...
சின்னக் கால் முளைத்த என் இதயம்
மெதுமெதுவாய் நடந்து போகும்!!!
குருட்டுச் சிற்பி!
அழகாகச் செதுக்கிய
சிற்பங்களை உடைத்தெறிந்து
ஆனந்தங்கொள்ளும் அணங்குகளிற்கு...
தெறித்துக் கிடக்கும் சிற்பப் பிணங்களின்
ஊமை அழுகுரல்கள் கேட்பதில்லை!
சிற்பத்தை சீரெடுத்த
உளிகளின் வலிகளும்...
கலைஞனின் கதறல்களும்...
எப்பொழுதும் புரிவதில்லை!
உடைந்துபோன சிற்பச் சிதறல்களை
ஒவ்வொன்றாய்ப் பொறுக்கியெடுத்து,
ஒட்டவைத்து மீண்டும்
உயிர்கொடுக்கும் ஆசையுடன்,
காணாமற்போன ஒருதுண்டை...
இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றான் குருட்டுச் சிற்பி!
கூர்மையான விழிகளுடன் காத்துக்கிடக்கின்றன உளிகள்...
புதிதாய் ஒரு சிற்பம் வடிக்க...!
கார்கூடல்...!
அணைக்கப்பட்ட ஒளியில்
பிணைக்கப்பட்ட நிலையில்
ஆண்மையின் வன்மையிலும்
பெண்மையின் மென்மையிலும்
அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்!
செளித்து வளர்ந்த புல்வெளியும்...
அதில் வளைந்து நெளிந்த நீராறும்...
நெடிதுயர்ந்த மலைமுகடும்...
கொஞ்சும் இயற்கை எழிலை
விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள்
ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை!
மங்கிய ஒளியில் நிகழும்...
மங்களமான நிகழ்வுகளெல்லாம்
மயங்கிய நிலைகொடுக்க,
தயங்கியே தஞ்சமடைவதாய்
ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை!
இயங்கிய ஈருடலும்...
கிறங்கிய நால்விழியும்...
காரிருள் கானகத்தை உரசி...
சூடேற்றிப் பற்றவைக்க,
அடித்தோய்ந்த மழையில்
நனைந்து நின்ற மரக்கிளைகள்போல்
ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!!
கண்களால் களவாடுறாள்...!
கயல் விழியாள்...
பயல் மனசைப் பறிக்க,
வயல் வழியால் ஏதோ
புயல் வருதே!
காதலும் வேண்டாம்...
கூடலும் வேண்டாமென...
ஒதுங்கிப் போனவனின் மனம்,
பதுங்கிப் பாய்கிறதே!
செதுக்கிய சிற்பங்களின் பார்வையில்
வழுக்கிய இதயம் இடறி...
வாய்க்காலோரமாய் விழுகிறதே!
மனத்தடைகளைத் தகர்த்து...
உடலுடைகளை அவிழ்த்து...
தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி!
கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!!
கோவலனாகி கோணலாய்...
கேவலமாகி நாணலாய்...
மாறும்வரை மாற்றுகிறாள்!
முத்து முத்தாய் முத்தங்கள்...
ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்...
தூறும் மழைச் சாரலைப்போல்,
மெதுமெதுவாய் நனைக்கிறாள்!
நனைந்தவன் மேனியில்,
புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்!
சிதைந்தவனின் சிந்தையில்...
புதைந்தவனின் விந்தையில்...
இணைந்தவள்,
மொந்தையில் கள்ளூற...
மெத்தையில் உள்ளூற...
வித்தையால் விளையாடுகிறாள்!
ஒரு கள்வனிடமே களவாடி முடிக்கிறாள்!
இரு கண்களினால் களமாடி வெடிக்கிறாள்!
கண்களால் களவாட
பெண்களால்தான் முடிகிறதே!!! ;)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



