Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 ஆக., 2013

அக்கரை மாடொன்றின் கவிதை...


பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி,
இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும்  இல்லை!
நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல...
கென்டுக்கியும் மக்டொனால்டும்  இல்லவே இல்லை!!

 

அழகான காரிலிங்கு  சொகுசாக சுற்றினாலும்,
ஊரிலுள்ள தெருவெல்லாம்...
சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல்
சந்தோசமாயில்லை...!
பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால்,
வாய்மட்டுமா இனிக்கும்...?!
முழு மனசுமே சேர்ந்தினிக்குமே!



கிடைச்ச நேரமெல்லாம்
கந்தப்புவின்ர காணியில
விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை
நேரடி அலைவரிசையில்
பார்க்கமட்டுந்தான் முடிகிறது...
இரசிக்க முடியவில்லை!


அதிகாலை சுப்ரபாதத்தையும்
திருவெண்பா காலச் சங்கொலியையும்
அதிகாலைத் தூக்கத்திலும்
இரசித்த மனதுக்கு ...இப்பொழுதெல்லாம்,
வேலைகெழுப்பும்  அலாரம்
அவஸ்தையாய் இருக்கிறது!


 
இங்கையும் கோயில் இருக்கு... !
திருவிழாவும் நடக்குது...!?
ஆனால் ஊர்க்கோயில் திருவிழாவுக்கு
ஊர்ப்பெடியளோட போனதையும்,
சாமியைப் பார்க்காமல்
சாறிகட்டி வந்த பள்ளித் தோழிகளை
பார்த்து ரசிச்சதையும்
இப்பவும் நினைச்சு   ஏங்குது மனசு...!



நல்லெண்ணெய் வைத்து நன்றாக
இழுத்துக்கட்டிய  ரெட்டைப்பின்னலிலும்
எண்ணெய் வடியும்  சிரித்த முகத்திலும்
தெரிந்த பேரழகுக்கு நிகராய்,
இங்கு அலங்காரப்படுத்தப்பட்ட முகங்கள்
அழகாய்த் தெரியவில்லை!



அரும்புமீசை முளைக்க முன்னரே
அரும்பிய முதற் காதலையும்,
கொடுக்கப்படாத காதல் கடிதங்களையும்...
காலம் எனும் கறையான் அரித்துவிட்டாலும்,
இப்பொழுதும் அரும்புகின்ற நினைவுகள்...
குறுந்தாடியை விரல்களால்
மெதுவாக வருடத்தான் செய்கின்றது.



ஊரில் பட்டம்விட்டுத் திரிந்த சின்னப்பையன்...
இன்று நூலறுந்த பட்டம்போல,
எங்கோ ஒரு தேசத்தின் மூலையில்
'அகதி' என்ற பெயரோடும்...
அழகான ஊரின் அழியாத ஞாபகங்களோடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக