எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...!
வாங்க வந்தார்கள்!!
தேவதைகளுக்கும் தேவை அதிகம்
தேவையில்லாமல் தேடி வந்தார்கள்!
அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்!
வந்துபோனபின்... எம்மிடம்
மிச்சம் மீதியாய் இருந்ததையும்
அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!!
வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு
காட்சிதரும் தேவதைகளே!
பாவம் நாங்கள்...
சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!!
போர் என்றும் சமாதானமென்றும்
போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும்
தீர்வென்றும் தீர்மானமென்றும்
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்!
எதுவுமே நடக்கவில்லை!
சாவின் விளிம்பில் நின்று கதறியபோது
சாப்பிட ஏதுமின்றி திணறியபோது
செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறியபோது
உறவுகளை பறிகொடுத்து பதறியபோது
உலகெங்கும் கேட்கத்தானே கூவியழைத்தோம்!
எங்கே போயிருந்தீர்கள்???
தேவதைகளே... உங்களைத்தான் கேட்கின்றோம்!
எங்கே போயிருந்தீர்கள்???
தோன்றுவதும் மறைவதும்
தோண்டுவதும் மறைப்பதும்
வருவதும் போவதும்
வரம் கொடுப்பதும் கொடுக்காததும்
எதைப்பற்றியும்...
இப்பொழுது நாம் நம்புவதில்லை... கவலைப்படுவதுமில்லை!
ஏனெனில்..
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
இன்னும் எத்தனை தேவதைகள் வருவார்கள்?!
வரட்டும்... வரமோ சாபமோ
கொடுக்கட்டும்!!!
எதைப்பற்றியும் கவலையில்லை...!!!
ஏனெனில்,
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
இதுவும் அப்படித்தான் !!!
######## ######## ######## ######### ########
( சர்வதேசத்துக்கான தேவதையின் இலங்கை வருகையினைக் குறித்து 03/09/2013 அன்று எழுதப்பட்ட கவிதை )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக