கரைமணலைத் தொட்டுத்தொட்டு விளையாட...
நுரையலைகள் விட்டுவிட்டு அலையாட...
திரைகடல் மெட்டுப்போட்டு இனிதான,
திரைப்பாடல் ஒன்றின் முதல்வரியை ஞாபகமூட்டும்!
மெதுவாய் வீசுகின்ற உப்புக்காற்றின் ஈரம்,
பக்கம்வந்து பேசுகின்ற வார்த்தைகள்...
முன்பொருநாளின் மாலைப்பொழுதில்
அன்போடு மணல் அளைந்த
இருபது விரல்கள் பற்றிய கதை பேசும்!
உப்புக்காற்றில் உலர்ந்துபோன
இருஜோடி இதழ்கள்
காதலின் பருவமழையில்
முழுதாக நனைந்துபோக...
செக்கச் சிவந்த வானம்கூட
அவளின் கன்னம் பார்க்க வெட்கப்பட்டு
மேகத்தை அள்ளிப் போர்த்துக்கொள்ளும்!
மெளனங்கள் பேசிக்கொள்ளும்
ரம்மியமான மாலைப்பொழுதில்
விரிந்த கடலுக்கும் வானத்துக்கும் இடையே
எதிர்காலக் கனவுகளை
திரையிட்டுப் பார்த்துக்கொள்ளும்.... இரு மனசுகள்!
அவன் தோளில் சாய்ந்தபடிதான்...
அவளுக்குப் பேசப்பிடிக்கும்!
பிறக்கப்போகும் முதற் குழந்தையிலிருந்து,
பேரப்பிள்ளைகள் வரைக்கும்...
நிறையக் கதை பேசுவாள்!
குழந்தைத்தனமாக அவள் சொல்லிக்கொண்டிருந்தால்,
கேட்டுக்கொண்டே இருக்கலாம்...!
அத்தனை இனிமையாயிருக்கும்...!!
எட்டிப்பார்க்கும் நிலாப்பெண்ணை,
ஒட்டிநின்று ஓரக்கண்ணால் ரசித்தபடி...
விட்டுச்செல்ல மனமின்றி,
மெல்ல அகலுவான் பகலவன்!
அவள் விடைபெறும் வேளைகளில்...
அவனும் அப்படித்தான்...!!
அவனுடைய மாலைப்பொழுதுகளை...
தன்னுடன் இனிமையாக்கிய தேவதை அவள்!
"தேவதைகள் தோன்றி... பின் மறைந்துவிடுவார்கள்"
அப்படித்தான் அவளும் !
திடீரென்று ஒருநாள்,
சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து போனாள்!
மறைந்து... மறந்து....
இத்தனை வருடங்கள் ஆகியும்
மணல் மீது அழியாமல்
அப்படியே இருக்கின்றன காற்றடங்கள்!
வழக்கமான அந்த இடத்தில்
அத்தனை நினைவுகளும்....
குவிந்து கிடக்கின்றன மணல்மேடாய்!
மணல்வீடு கட்டி விளையாடும்
சின்னக் குழந்தைகளை பார்த்தபடி,
தனியாக ஒருவன்........
அக்கடற்கரையின் மணற்பரப்பில்,
ஒரு தேவதையின் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறான்!
கடலலைகள் ஓயாமல்
அதனை... அழித்துக்கொண்டே இருக்கின்றன...!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறிப்பு:
இக்கவிதையின் ஒலிவடிவம் "இசைக்கவிதைகள்" பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக