Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

14 ஏப்., 2014

மீண்டுமொருமுறை வந்துவிடாதே...!!!


ஒரு மார்கழி இருபத்தாறில்தான்,
பேராறுபோல் பெருக்கெடுத்தாய்....
எம்  ஊருக்குள்ளே!
பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை...
நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்!

சொல்லாமல் கொள்ளாமல் வந்து,
எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..!
இத்தனைநாளாய் உன்னில்
அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம்,
ஒற்றைநாளில் மொத்தமாய்
நீ அள்ளியெடுத்தாய்..!!
கடல்தாயே... மறந்துவிட்டாயா?


சுனாமியென்றால் எமனின் பினாமியென்று
அன்றைக்குத்தான் தெரியும்!
என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...!
அன்றுதான்  உன்னைத் தூற்றினோம்...!!


என் பாட்டன் உன்மேல் வலைவீசினான்,
என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான்,
எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது?
நீ அலையலையாய் அடிக்க...
நுரைக்குமிழி பிடித்து விளையாடிய  பிஞ்சுகளையும்
அலையோடு அழைத்துச்சென்றதேனோ?


உன்னைத்தானே தெய்வமென்றோம்!  -அதற்கும் மேலே,
உன்னைத்தானே தாயுமென்றோம்!!
எம்  பிஞ்சைக்கூட  
வஞ்சம் தீர்த்தாய்... ஏன் தாயே?!


செத்து  மிதந்தது  யேசுபாலன் சிலைகள் மட்டுமல்ல,
எம் பாலகரும்தான்...!
பாலூட்டிச் சீராட்டி  வளர்த்த பாலரையெல்லாம்
நீராட்டி அழித்தாய்... ஏன் தாயே?!


மீண்டுமொருமுறை வந்துவிடாதே..!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!
போரின் பசிக்கு... குடுத்தது போக,
மிஞ்சியிருப்பது... எம் கண்ணீர் மட்டுமே!
அதை வேண்டுமானால்,
உனக்கே  காணிக்கையாக்குகின்றோம்!


மீண்டுமொருமுறை வந்துவிடாதே!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!!

__________
26-12-2013
 ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~~
     

                                          இக்கவிதையின் இசைவடிவம்: 
                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக