324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06
சில வேளைகளில்....
சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட
காதல் தொற்றிக்கொள்கிறது!
அதன் இனிய நினைவுகளால்...
மனம் கொஞ்சம்... தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது!!
காத்திருப்புக்களும் சந்திப்புகளும்
கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்....
அந்த தேநீர்விடுதி!
வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும்
அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...!
காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில்
அதற்கும் கொள்ளைப் பிரியம்...!!
அங்குள்ள பணியாளரைப்போலவே
இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!!
அவளுக்காகக் காத்திருந்த
பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....!
அவள் வரும்போது...
வண்ணங்களையும் வாசனையையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறாள்!
திடீரென்று எல்லாமே..... அழகாக மாறும் மாயம்,
அங்கேதான் நடந்திருக்கிறது!!
காற்றிலாடும் அவளது துப்பட்டா....
வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டுக்கொண்டே இருக்கும்!
சூடாறிய தேநீர் அப்படியே காத்திருக்க...
ஆறுதலாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன
மெளனங்கள்!
அங்கு....
தேநீர் எப்பொழுதும் இனித்ததில்லை!
குடித்துத் தந்த மீதித் தேநீரில்...
நிறையக் காதலும் கலந்திருந்தது..!
இனியவள் அருகில் இருக்க...
இனிப்பாக வேறெதுவும் இருந்ததில்லை...!!
மென்மையை ரசிக்க ஆரம்பித்ததே
அவள் மென்கரங்களில்தான்! -நான்
பெண்மையை ரசிக்க ஆரம்பித்ததும்
அவள் நாற்குணங்களில்தான்!!
ஒரு தேவதையை அருகில் உட்காரவைத்து
தேநீரையும் அன்பையும் பரிமாறியபடியே
கழிந்த பொழுதுகள் இனிமையானவை!
கடிகாரம் மீது பலதடவை கோபித்துக்கொள்வதும்,
கடுகதி வேகத்தில் சுற்றும்... முட்களைப் பார்த்து முறைத்துக்கொள்வதும்,
ஐந்தைந்து நிமிடங்களால் பிரியாவிடைகளை தள்ளிப்போடுவதும்,
'இன்னும் கொஞ்சநேரம்.....' என கெஞ்சிக்கொள்வதும்,
அப்போதைய அன்றாட அனுபவங்களாய்....
இருவரையும் ஆக்கிரமித்திருந்தன!
பிரிவுகள் மீண்டும் சந்திப்பதற்காய் அமையும்வரை...
அவை தற்காலிகமானவைதான்...!
இனிமையானவையும்கூட..!! - ஆனால்
நிரந்தரமான பிரிவுகள்...
சில இடங்களையும் பல சம்பவங்களையும்
ஒன்றுமில்லாத வெறுமையாக்கி விடுகிறது.
மீண்டும்.... அந்த தேநீர்விடுதியையும்
வெறுமையான அந்த நாற்காலிகளையும்
தனியாக பார்க்கும் திராணியற்ற மனதினை
அதன் இனிய நினைவுகளால்
கொஞ்சம் தேற்றிக் கொள்கிறது மனசு!
காதலைப்போலவே... அதன் நினைவுகளும்
மாயங்கள் செய்யும்!
காயம்பட்ட மனதிற்கு..... மனமே
மருந்து போட்டுக்கொள்ளும் மாயத்தினை,
காதல்நினைவுகளால் மட்டுமே நிகழ்த்த முடிகிறது...!!!
***** ***** ***** ***** ***** ***** ***** *****
நீண்ட நாட்களின் பின்னர் அந்த தேநீர் விடுதியின் படத்தினை தற்செயலாக மீண்டும் பார்க்க நேர்ந்தபொழுதில்....
மனதில் தோன்றிய கிறுக்கல் ( சனிக்கிழமை இராப்பொழுதில் திராட்சை இரசத்தை பருகியபடி~~~ )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக