பதின்மங்களின் படிமக்கனவுகள்;
புதினங்களாய் பேசிக்கொள்ளும்
இரகசிய வார்த்தைகள்;
இளசுகளின் சுத்தல்களில்
பெருசுகளுக்குப் புரியாத
தலைமுறை வளர்ச்சியின்
வழக்கமான அதே காதல்!
எப்போதும் புத்தம் புதிதாய்
மின்னும் எண்ணங்களுடன்
தோன்றும் மின்னல்கள்!
மின்சாரம் இல்லாத ஊரில்
மனசுக்குள் விளக்கெரியும்!
இரு ஜோடி இதழின் அழுத்தத்தில்
பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்!
முதல் முத்தம் எப்பொழுதும்
தலைக்கேற்றும் பித்தம்!
முதன்முதற் காதல்....
காலத்தால் அழியாத
இதயத்தின் மோதல்!
சூரிய உதயங்கள் வரை
வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த
வாலிப பருவத்தின்
வலிந்த போர்க்காலங்கள் !
கருவேப்பிலை மரத்தைக்கூட
பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து
நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து
பார்வையாலே பேசிக்கொண்டு
மனப் போர்வைக்குள்ளே ஒளித்தபடி
ஊரறியாமல் உலகறியாமல்
உற்றவர் யாருமறியாமல்...
சந்திக்கும் அரிதான பொழுதொன்றில்,
பத்து விரல் பற்றுகையில்...
பக்கென்று பற்றிக்கொள்ளும்
பதினாறு வயசல்லவா அது!
எண்ணிரெண்டு வயதில்...
கண்ணிரெண்டில் கலக்கம்!
கன்னியவள் மனதில்...
துளிர்க்குது மயக்கம்!
காதலின் கிறக்கம்...
இன்னுமேன் தயக்கம்!
முதல் காதல்;
முதல் முத்தம்;
இன்னும் பல...!!!
பெரும்பாலும் ,
அந்த வயது அனுபவங்கள்
அனைவருக்கும் பொதுவானவை!
மீண்டும்,
மீட்டிப்பார்க்கும் நினைவுகள்
எப்பொழுதும் இனிதானவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக