Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

2 மே, 2014

ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்...!


உலகின் அத்தனை தட்டுக்களிலும்
சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த
அத்தனை கிண்ணங்களும்

பலவித எண்ணங்களால்
நிரம்பி வழிந்துகொண்டிருந்தன!
வாழ்வெனும் விருந்துக்கு
அங்கிருந்த அனைவரும்
கட்டாய விருந்தாளிகள்!

பித்துப் பிடித்து தேடியலையும்
சுயநல விரல்களுக்கு...
அப்படியொரு வெறி!
போட்டிபோட்டு முண்டியடித்து...
ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை!
சில வாய்கள் சிரித்தபடியே
செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன!


வேண்டாமென ஒதுங்கிப்போகும்...
ஒவ்வொரு நொடியிலும்,
எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும்,
மானிட விரல்களுக்குள்...
திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்!


எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...?
என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை!
அவசியமுமில்லை...!!
எதை ஏந்துகிறோமோ...
அதை பருகியே ஆக வேண்டுமாம்!
விதிகள் வகுக்கப்படாத மானிட வெளிகளில்...
விதிகள் எல்லாம்...
நடுவீதி நாய்க்குட்டியாகிவிடுகிறது!
மிதிபட்டால் விதி - இதுவே
வாழ்வியல் நியதி....சதியும் கூட!


வெற்றி தோல்வி... இன்பம் துன்பம்,
அழுகை சிரிப்பு... நட்பு பகை,
பசி... தூக்கம்... கோபம்... காமம்,
வன்மம்...துரோகம்...பிறப்பு... இறப்பு.... என
அவை தரும் போதை
இன்னும் எத்தனையோ!!!

எத்தனை விதமான உணர்வுகளை...
கிண்ணங்களை நிரப்பியவை தருகிறது!?
அதைத்தான் போதை என்பதா? அல்லது
மனதின் பேதை என்பதா?


இந்தக் கிண்ணங்களை வெல்லும்
ஒரு கிண்ணம் ஏந்த வேண்டும்..!
மானிடத்தின்... மனிதநேயத்தின்...
வெற்றியைக் கொண்டாடும்...
மாற்றத்தை உண்டாக்கும்...
ஒரு கிண்ணத்தை ஏந்தியே ஆகவேண்டும்..!!


எம் எண்ணங்களையும் வண்ணங்களையும் மறந்து
அதற்காகவே நீயும் நானும் போராடவேண்டியிருக்கிறது...!
இந்த உலகவிதிகளைத் தாண்டிப் பாயவேண்டியிருக்கிறது...!!


வெற்றிவிழா விருந்தில் பல
மானிட முகங்கள் தெரிகிறது!
விரல்களில் உட்கார்ந்த
அனைத்துக் கிண்ணங்களிலும்
மனிதநேயம் நிரம்பி வழிகிறது!
கனவிலும்... காதைப் பிளக்கிறது கரகோசம்...!


அதிகாலை விடிந்து... எழும்புகையில்,
அருகில் சூடாறியபடியே
காத்துக் கிடக்கிறது....
எனக்கான தேநீர்க் கிண்ணம்!!!

 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக