என்னுடைய அதிகபட்ச ஆசைகள் என்பதெல்லாம்,
நான் எழுதுகின்ற மாதிரியே வாழணும்!
வாழுகின்ற விஷயங்களையே எழுதணும்!... என்பதுதான்!!
எதிர்த்த மாடிக்கட்டிடங்களின் கண்ணாடிகளில்,
முகம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம்!
அவை முகத்தில் ஓடும் சோக நரம்புகளை மட்டுமே
பெருப்பித்துக் காட்டுகின்றன!
எம் கண்ணீரில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளியும் வானவில்லாகி...
கட்டணப் பரிமாற்றங்களில் ஊர்போய்ச் சேர்கின்றது!
அந்நியத் தெருக்களில் கொஞ்ச தூரம் நடந்தவுடன்,
களைத்துப் போகின்றேன்... ! ஏனென்று புரியவில்லை!?
பழக்கப்படாத தெருக்களும், கொஞ்சம் பழகின முகங்களும்...
ஏதோ, அகழிகள் போல் பயமுறுத்துகின்றன!
என்னுடைய ஊர் ஒழுங்கைகளின் புழுதிமண் வாசனையும்...
மழைக்கால சகதிகளும்... இப்பொழுது, எவ்வளவோ சந்தோசமாய்த் தெரிகின்றன!
ஒற்றைப் பையில் நாலு தாள்கள் என்னிடம்!!
இங்குள்ள நாய் கூட என்னைப் பார்த்துக் குரைக்கும்!!!
மேலும் கீழுமாய் நாலு பைகளிலும்...
கட்டுக்கட்டாய் வண்ணத் தாள்களும்..
கீறல் படாத கடனட்டைகளும்..
நாலு சில்லுடனும்... உள்ளே ஜில்லுடனும்...இடமிருந்தால்...
நாலுபேர் வந்து தோளில் சுமக்கும்..
மண்மீது வாழ்ந்துகொண்டு...கண்ணீரைக் குடித்தபடி,
உண்மையாய் சுமப்பதற்கு நாலுபேரைக் காண்பதற்கு ...
என் நிலம் வேண்டும் எனக்கு!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக