Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

23 ஆக., 2013

விடியல்...!


இரவுகளை ஆட்கொள்ளும் இருளை,
நிலவும் நட்சத்திரங்களும் எதிர்த்து

நடத்தும் போராட்டங்கள் கூட இதமானவைதான்!
வெண்மதியை மறைக்கும் மேகங்கள்
அங்கேயே நிலைப்பதில்லை!
விலகிச்செல்லும் மேகங்கள் போல,
கடந்துபோகும் நேரங்கள் நகர்கிறது...
விடியலை நோக்கி!


 

வாழத் துடிக்கும் மனசு....
தாழப்பறக்கும் வண்ணத்துப் பூச்சிபோல,
சிறக்கடிக்கத் தொடங்கும்!
காணத்துடித்த  விடியலின் ஒளியில்
பூத்த மலர்களில் உட்கார்ந்து...
மரகத மணிகளை உருட்டி விளையாடும்!
 

குயில்களின் கானங்கேட்டு
துயின்ற கதிரவன் துயிலெழுவான்!
மனவறையில் ஒட்டிய
பனித்துளித் துயரங்கள் அனைத்தும்
கதிரவன் கதிரிலே காணாமற் போகும்!
மெல்லப் பரவும் ஒளியில்
பிரசவமாகும் விடியலில்
பரவசமாகும் பூலோகம்!


 

வலியவன் மனதிலே இருளோடு கரைய...
ஒளியிவன் வாழ்விலே விடியலாய்ப் படியும்!


ஒவ்வொரு இரவும் இன்னொரு விடியலுக்கானது!

நானொரு ஏதிலி...



சுற்றமும்  உற்றமும்
ஊர் முற்றமும்   முழு நிலவும்
கவளச் சோறும்    கருவாடும்
பனங்கட்டியும்   பணியாரமும்
மண்சட்டியும்    கல்லடுப்பும்
தட்டை வடையும்     எள்ளுப்பாகும்
ஒடியல்கூழும்    நண்டுக்கறியும்
 ஊறுகாயும்    மோர்மிளகாயும்


ஆலமரமும்    பிள்ளையார் கோயிலும்
வறுத்த கச்சானும்     வில்லுப்பாட்டும்
கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும்
மாட்டுவண்டியும்    பொச்சுமட்டையும்
பஞ்சுமுட்டாயும்      இஞ்சித் தேநீரும்
பூவரசும்     நாதஸ்வரமும்
வாழைமரமும்     பாலைப்பழமும்
வல்லைவெளியும்    முல்லை நிலமும்
பள்ளிக்கூடமும்   பழைய நண்பரும்


சித்திரைவெயிலும்   செவ்விளநீரும்
மாரி மழையும்   மண்வாசமும்
மதவடியும் உதயன் பேப்பரும்
லுமாலா சைக்கிளும்    குச்சொழுங்கையும்
பேரூந்தும்    புழுதிக்காற்றும்
கடற்கரையும் மணல்வீடும்
கட்டுமரமும்   உடன்மீனும்
குழற்புட்டும் முட்டைப்பொரியலும்
சுடுதோசையும்   இடிசம்பலும்
பாலப்பமும்    இடியப்பமும்,

இனியெப்பவும்  கிட்டாத....பார்க்கமுடியாத.......
என் பென்னம்பெரிய பேராசைகளாயிப்போனதோ...???
நானொரு  ஏதிலி என்பதால்.....!!! 

மனைவி...!


அதிகாலை அழகாக தெரிகிறது…
அவள் முகத்தில் விழிப்பதனால்!
ஒவ்வொரு நாளும் அவளோடுதான்...
ஆனந்தமாய் விடிகிறது!


ஒவ்வொரு நொடியும் அழகாக...
விதம்விதமாய்த் தெரிவாள்!
கழுவாத முகத்தோடும்
களையாக இருப்பாள்!
களைத்தாலும் சளைக்காமல்
அவள் வேலை முடிப்பாள்!
உழைத்தாடி வரும் தலைவன்
களைப்பெல்லாம் போக,
கனிவான வரவேற்று
அன்பாகப் பார்ப்பாள்!

 

குழந்தையாய் சிரிப்பாள்…
அவனோடு.... குழந்தையும் சுமப்பாள்!
உயிரோடு உயிராக…
உலகமே அதுவாக,
அவனுக்கும் அவளுக்குமாய்…

அவளின் சின்ன உலகத்துக்காய்...
அவள் தன் உயிரையும் கொடுப்பாள்!

ஒவ்வொரு மனைவியும்
அவள் கணவனுக்கு...
இரண்டாவது தாய்தான்!!!


So...Guys!
  :wub:  Love your wife!  :wub:

அக்கரை மாடொன்றின் கவிதை...


பழஞ்சோற்றிலும் பழைய மீன்குழம்பிலும் இருந்த ருசி,
இங்குள்ள பீட்சாவிலும் பர்கரிலும்  இல்லை!
நாட்டுக்கோழி... நம்நாட்டு நாட்டாடுபோல...
கென்டுக்கியும் மக்டொனால்டும்  இல்லவே இல்லை!!

 

அழகான காரிலிங்கு  சொகுசாக சுற்றினாலும்,
ஊரிலுள்ள தெருவெல்லாம்...
சைக்கிள் மிதித்துத் திரிந்ததுபோல்
சந்தோசமாயில்லை...!
பெட்டிக்கடையில் மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டால்,
வாய்மட்டுமா இனிக்கும்...?!
முழு மனசுமே சேர்ந்தினிக்குமே!



கிடைச்ச நேரமெல்லாம்
கந்தப்புவின்ர காணியில
விளையாடி மகிழ்ந்த கிரிக்கெட்டினை
நேரடி அலைவரிசையில்
பார்க்கமட்டுந்தான் முடிகிறது...
இரசிக்க முடியவில்லை!


அதிகாலை சுப்ரபாதத்தையும்
திருவெண்பா காலச் சங்கொலியையும்
அதிகாலைத் தூக்கத்திலும்
இரசித்த மனதுக்கு ...இப்பொழுதெல்லாம்,
வேலைகெழுப்பும்  அலாரம்
அவஸ்தையாய் இருக்கிறது!


 
இங்கையும் கோயில் இருக்கு... !
திருவிழாவும் நடக்குது...!?
ஆனால் ஊர்க்கோயில் திருவிழாவுக்கு
ஊர்ப்பெடியளோட போனதையும்,
சாமியைப் பார்க்காமல்
சாறிகட்டி வந்த பள்ளித் தோழிகளை
பார்த்து ரசிச்சதையும்
இப்பவும் நினைச்சு   ஏங்குது மனசு...!



நல்லெண்ணெய் வைத்து நன்றாக
இழுத்துக்கட்டிய  ரெட்டைப்பின்னலிலும்
எண்ணெய் வடியும்  சிரித்த முகத்திலும்
தெரிந்த பேரழகுக்கு நிகராய்,
இங்கு அலங்காரப்படுத்தப்பட்ட முகங்கள்
அழகாய்த் தெரியவில்லை!



அரும்புமீசை முளைக்க முன்னரே
அரும்பிய முதற் காதலையும்,
கொடுக்கப்படாத காதல் கடிதங்களையும்...
காலம் எனும் கறையான் அரித்துவிட்டாலும்,
இப்பொழுதும் அரும்புகின்ற நினைவுகள்...
குறுந்தாடியை விரல்களால்
மெதுவாக வருடத்தான் செய்கின்றது.



ஊரில் பட்டம்விட்டுத் திரிந்த சின்னப்பையன்...
இன்று நூலறுந்த பட்டம்போல,
எங்கோ ஒரு தேசத்தின் மூலையில்
'அகதி' என்ற பெயரோடும்...
அழகான ஊரின் அழியாத ஞாபகங்களோடும்!

24 ஏப்., 2012

இராப் பயணங்கள்...!


உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ ,
உடல் முழுதும் பரவிச்செல்ல...
கடல் மீது மிதக்கும் கப்பலானது,
தேகங்கள் இரண்டும்...!

மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக...
அமைதியான கடலும்,
ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்...
அடங்காக் குணங்கொண்டது...!
நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்...
வள்ளமும் கள்ளமாய் செல்லமாய்,
கொஞ்ச ... மோக வேகமெடுத்தது...!

யாருமில்லாத தீவொன்றில்...
கரையொதுங்கியது காமரசம் சுமந்த கப்பல்...!
பாய்ச்சிய நங்கூரம் தரைதொட்ட போதும்...
அலைகளோடு ஆடிக்கொண்டே இருந்தது,
தரைதட்டும் வரை...!

இரவோடு நிலவொளி புணர்ந்து,
வெள்ளி மலை முகடுகள் அலையலையாய்...
கார்கடற் பள்ளங்கள் மீ
தெழும்ப,
வேகமாய் கரைதேடி ஓடின நீரலைகள்..!

கரைகளில் களைத்துப்போன...
மூச்சுக்காற்றின் நீர்க்குமிழிகள்,
வெள்ளை நுரைகளாய் அடித்தோய்ந்து...
மீண்டும் கரைவரும் அலைகளில்...
கலக்கத் தயாராய் வெடித்து,
நீர்நிலையாகி நிலையெடுத்து நின்றன!

பாய்மரம் இறக்கிய கப்பல்,
மணற்கரைகளில் தவழ்கின்றது...
அடுத்த பயணத்துக்காக,
கடல் மீது இறங்க...!

மிதக்கும் நீரில் மூழ்கும்வரை,
கப்பல்களின் பயணங்கள் தொடரும்...!