Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

13 ஏப்., 2014

கனவில் வந்து போறவளே...!





ரொம்பக் குளிருதடி...
கொஞ்சம் பாரேன்டி!
தேகம் நடுங்குதடி...
பக்கம் வாயேன்டி!


வெள்ளை நிறத் தேவதையே...
வண்ண முலாம் பூசுறியே!
கிட்ட வந்து முட்டுறியே...
தட்டி விட்டுப் போகிறியே!


தொட்டுப் பார்க்க முன்னால...
கட்டிப் போடுறாய் கண்ணால!
ஓரங்கட்டுறாய் தன்னால...
ஒண்ணும் முடியல என்னால!

கண்ணைச் சிமிட்டாதே...
கடித்துக் குதறுதடி!
என்னை மிரட்டாதே...
எண்ணம் சேர்ந்து மிரளுதடி!


என்னைத் தூண்டி இழுக்கிறாய்...
எல்லை தாண்ட அழைக்கிறாய்!
இன்பத் தொல்லை தருகிறாய்...
தீண்டும் முன்பே மறைகிறாய்!


வண்ணம் தந்த வானவில்லே...
எங்கேயுன்னைக் காணவில்லை!
கனவில் வந்து போறவளே! -உன்
நினைவில் நொந்து போகிறேன்டி!


%%%%%%%%%%%%%%%%%%%%%%% 

வடக்கிலிருந்து சூரியன் உதிக்கிறது...!?




சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி
நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...!
கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து
விளையாடும் பால்நிலவைப் பார்த்து
தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...!
பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது
காற்றடிக்கும் போக்கில்
இங்குவரை கேட்கிறது...!


நேற்று இங்கு நடந்ததை
எத்தனை தடவைதான்
நினைத்து நோவது...?!
அப்படியே தூங்கிவிட்டேன்...!
எனக்குத் தெரியும்...
நான் தூங்குகின்றேன்...
அதை உணர முடிகிறது என்னால்!
கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன...

குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்...
இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!?
நிலவொளியின் வெளிச்சத்தில்
நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்!
சவுக்கு மரக்காடுகளின் நடுவே...
சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்து
முன்பொருநாள் புதைந்துபோன
கரிகாலச் சோழனின் போர்வீரர்கள்
குதிரையில் வருகிறார்கள்!
கனவிலும் மனம் பூரிக்கிறது...!
ஆஹா... விடுதலை !!!


இப்பொழுது எழுகிறேன்...
ஏனென்று தெரியவில்லை!
குதிரைகளையும் காணவில்லை...!!!
என்னால் உணர முடிகிறது!
இன்னும் விடியவில்லை!
பாலுக்கழுத குழந்தை
இன்னும் அழுகையை நிறுத்தவில்லை...
அதே காற்று... அதே சத்தம்!
நரிகளின் ஊளைச் சத்தத்தில்
என் தூக்கம் கலைந்திருக்கலாம்!
ஏதோ ஒரு கனவு கண்டதாய்
ஞாபகம் வருகிறது
அதை நினைக்கும் முன்பே...
வடக்கிலிருந்து சூரியன் உதிக்கிறது!
நான்...
விடிந்துவிட்டதாய் எழுந்து நடக்கிறேன்!!!


**********            **********            **********

நீ தந்த எழுத்தாணி!



கலைவாணி நீ தந்தாய் எழுத்தாணி..!
தலைவணங்கி வேண்டுகின்றேன் துணைவாநீ...!!

ஞாலத்தின் ஒளியாகி...
ஞானத்தின் வழியாகி...

முத்தேவிகளில் முத்தானவளே...!
முத்தமிழின் வித்தானவளே...!!

தாய்த்தமிழுக்காய் எழுதுகின்றேன் 

உனைத் தாயாகத் தொழுகின்றேன்! 
என் தயவாக நீயிருந்து - என்றும்
நான் தவறாமல் பார்த்துக்கொள்!
*****   *****   *****   *****   *****

தேவதைகள் வந்துபோன தேசம்...



எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...!
வாங்க வந்தார்கள்!!
தேவதைகளுக்கும் தேவை அதிகம்
தேவையில்லாமல் தேடி வந்தார்கள்!
அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்!

வந்துபோனபின்... எம்மிடம்
மிச்சம் மீதியாய் இருந்ததையும்

அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!!
வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு
காட்சிதரும் தேவதைகளே!
பாவம் நாங்கள்...
சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!!

போர் என்றும் சமாதானமென்றும்
போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும்
தீர்வென்றும் தீர்மானமென்றும்
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்!
எதுவுமே நடக்கவில்லை!

சாவின் விளிம்பில் நின்று கதறியபோது
சாப்பிட ஏதுமின்றி திணறியபோது
செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறியபோது
உறவுகளை பறிகொடுத்து பதறியபோது
உலகெங்கும் கேட்கத்தானே கூவியழைத்தோம்!
எங்கே போயிருந்தீர்கள்???
தேவதைகளே... உங்களைத்தான் கேட்கின்றோம்!
எங்கே போயிருந்தீர்கள்???

தோன்றுவதும் மறைவதும்
தோண்டுவதும் மறைப்பதும்
வருவதும் போவதும்
வரம் கொடுப்பதும் கொடுக்காததும்
எதைப்பற்றியும்...
இப்பொழுது நாம் நம்புவதில்லை... கவலைப்படுவதுமில்லை!
ஏனெனில்..
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!


இன்னும் எத்தனை தேவதைகள் வருவார்கள்?!
வரட்டும்... வரமோ சாபமோ
கொடுக்கட்டும்!!!
எதைப்பற்றியும் கவலையில்லை...!!!
ஏனெனில்,
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
இதுவும் அப்படித்தான் !!!


########  ########  ########   #########   ########

 ( சர்வதேசத்துக்கான தேவதையின் இலங்கை வருகையினைக் குறித்து 03/09/2013 அன்று எழுதப்பட்ட கவிதை )

கொஞ்சம் நில்லடி கள்ளி...!


எந்திரமான எண்ணங்களுக்கு
தந்திரமாய் வண்ணங் கொடுக்கிறாய்!
பத்திரமான மனசுக்குள்ளே
சித்திரமாய் சிரிக்கிறாய்!

சொல்ல வரும் சேதி...
மெல்ல வந்து மோதி...
வெள்ளமாய் மேவி...
கள்ளமாய்த் தாவி...
செல்லமாய் நுழைகிறாய்!


வட்ட நிலா வானத்தில்
உன் முகமாய்த் தெரியுதடி!
கிட்டவந்து முற்றத்தில்
வானவில்லும் மிளிருதடி!


கதவடியில் நாய்க்குட்டி...
காலடியில் பூனைக்குட்டி...
அத்தனை காவலையும் தாண்டிவந்து,
கனவுக் கண்ணிகளை
என்  கண்களுக்குள் புதைத்துவிட்டு...
அப்பாவியாய்த்  தப்பிக்கிறாய்!


கொஞ்சம் நில்லடி கள்ளி..!
உன்னிடம் ஒரு கேள்வி...!!
என்னிடமிருந்து தூரமாய்...
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...???


~~~~~~  ~~~~~~~  ~~~~~~~  ~~~~~~~  ~~~~~~~