Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

31 ஜூலை, 2011

அப்பா.....!


நான் கேட்டுத் தூங்கிய ஆராரிரோ பாட்டில்,
பாதிப் பாட்டை பாடி முடித்த...
பாசத்தின் உருவம்   அவர்!

சரியெது பிழையெது எதுவும் தெரியாத பருவம்,
அம்மாவைத் தாண்டினாலும்..... என் அப்பாதான் எல்லை!
கண்டிப்பும் தண்டிப்பும் இருந்தாலும்,
அன்பு  அத்தனைக்கும் உறைவிடம் அங்கேதான்!

அப்பாவின் கைபிடித்து நடைபயின்ற நேரங்களும்,
கல்லூரிவரை கவனித்த காலங்களும்,
இன்றுவரை கண்முன் காட்சிகளாய்...
காலத்தால் அழியாத பாசங்களின் சாட்சிகள்!

உயிரைக் கொடுத்து உருவாக்கி... தன் உயிரைக் கொடுத்தும்
தன் உயிராய் எனை நினைத்து வளர்த்த... என் தெய்வத்துக்கு,
என்ன கடன் பட்டேனோ? என்ன தவம் செய்வேனோ??

நாளைக்கு.... நானும் ஒரு அப்பா!!!

28 ஜூலை, 2011

கல்லறை தாண்டியும்...

கல்நெஞ்சாய்  இருந்த நெஞ்சில்...
கல்வெட்டாய்
ப்  பதித்துவிட்டுப் போனாய்!
நான் உன்னைக் காதலிக்கின்றேன்... என்று!!
என் கல்லறை தாண்டியும் ...
உன்னுள் கருத்தரிக்க ...
கடவுளிடம் வரம் வாங்கி ...
என் ஜென்மமெல்லாம் பிறப்பெடுப்பேன்!!!

அவளுக்காக....


பூக்கள் பூப்பதற்கு காத்திருப்பதைப் போல
உன் அழைப்புக்களுக்காக விழிகள் பூத்திருப்பேன்!
இந்த உலகத்தில் பறக்கும் அத்தனை பட்டாம்பூச்சிகளும்
என்னைச் சுற்றியே பறப்பதாய் உணர்வேன்...
நீ என்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்!

இத்தனை இனிமை இருப்பதாய்க் கேள்விப்பட்டால்...
தேனீக்கள் உன்னை மட்டும் சுற்றியே வட்டமிடும்!
நிலவும் உன்னைப் பார்க்கப் பூலோகம் வரும்!
தென்றலும் உன்னைத் தேடி தெருத்தெருவாய் அலையும்!
கடலலைகள் உன் காலடியில் தவங்கிடக்கும்!

என்னைப் போலவே....!

27 ஜூலை, 2011

பணம்

வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி...
மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே,
காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்..
என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள்,
வானவில்லாகிப் போகாதா? என்று...
ஏங்கும் ,
பசித்து ஒட்டிய வயிறுகள்!!!
 
மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது...
பணம் பந்தியில் இருக்காது!
"காலங்கள் மாறும்" என்பது....  வெறும்  நம்பிக்கையாய் மட்டும்!!!

25 ஜூலை, 2011

கரடிப்பொம்மை

தேவதைகள் உலவும் நேரத்தில் வந்து என்னைத் தட்டியெழுப்ப,
என் கண்ணிமைகள் தாழ்ப்பாளிட்ட கதவுகளையும் தாண்டிவந்து,
கட்டியணைக்கும் தூரத்தில் நின்று கொண்டு,

காதல் கவிதை சொல்லுவாள்!
கனவிலும் என்னைத் தவிக்கவிடுவதில் ... 

என் காதல் தேவதைக்கு ஒரு...
கரடிப்பொம்மையை பரிசளித்த சந்தோசம் - எனக்குள்!

காதலின் காதல்

கடும் மழைக்குள் நனைந்தவனைப்போல
என் குடைக்குள் நுழைந்து...
எனை முழுதாய் நனைத்தாய் நீ!
அதற்காகவே... காத்துக் கிடக்கின்றேன் ;
நிதமும்....  அடைமழைக்காய் !

24 ஜூலை, 2011

பிணந்தின்னிப் புறாக்கள்

வெள்ளைப் புறாவுடன் வந்து...
"சமாதானம்" வந்துவிட்டது என்றார்கள்!?
சிவப்புப் பறவைகளாய்... சிதறிப் போயின அவை!
அதன்பின்புதான் பார்த்தோம்... நம் மண்ணில்,
புறாக்களும் பிணந்தின்னும் என்று!

இரட்டை வாழ்க்கை

மனிதனோடு ஒட்டிப்  பிறந்துவிடுகின்றதோ...  இல்லையோ...
அவன் சாகும்வரை... கூடவே வருகிறது இதுவும்!
எந்த உத்தமர் சரி.... எங்கிருந்தாலும் சொல்லட்டும் பார்க்கலாம்!!!???
அவரோடு  அது   இல்லையென்று!
இல்லையென்றால்.. அது பொய்!!!
மற்றவர்க்கு.......  துன்பம் வராவரைக்கும்...
எல்லாமே..... ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்!

23 ஜூலை, 2011

இன்றைய ஜனநாயகம்

ஜாதிகளும்....    மதங்களும்.....
தூக்கிப் பிடிக்கும் கொடிகளாகிவிட்ட பின்னர்,
"ஜனநாயகம்" என்ற போலிச்சாயம் பூசிய அழுக்குத் துணிகளுக்கு,
ஏன் வெள்ளைச் சிறகுகள்....???????

நீயும் நானும் எம் காதலும்...

எனக்குள் ஒரு தேவதையின் ஓவியமாய் நுழைந்தவள் நீ...!
காதலில் இருந்து தூரமாய் சென்றுகொண்டிருந்த எனக்கு - அதன்
இனிமையை பக்கத்திலிருந்து அள்ளிக்கொடுத்தவள் நீ...!
என் வாழ்க்கையில்....    நம்பிக்கைகள்.. ஆசைகள்.. 

அனுபவங்கள்.. எதிர்பார்ப்புக்கள்.. இலட்சியங்கள் என,  
நிறையவே விதைத்தவள் நீ...!

காதலையும்.. அதன் உண்மையையும்.. 

பிரிந்தாலும் வாழும் அன்பு என,
நீயும் நானும் நம் காதலுமாயும்தானே பார்த்தோம்...!
சின்னச் சின்ன ஊடல்... அதன்பின் செல்லமான
மன்னிப்புக்களோடு சேர்தல் என,
நீயும் நானும் நம் காதலும் என சேர்ந்துதானே செய்தோம்...!
உனது கவலையில் நானும்... எனது கவலையில் நீயும் .....

நம் காதலுமென,
ஒன்றாய்ச் சேர்ந்துதானே அழுதோம்!
 

ஆனால்  இன்று,   நான் மட்டும் வெடித்து அழ... எங்கே நீ...???
நம் காதல் என்னோடு மட்டும்தானா ???
ஒன்றை மட்டும் புரிந்துகொள் என்னுயிரே!!!
நான் உயிரோடு வாழும்வரை...

என் கடைசி மூச்சு இழுக்கும்வரை...
"எம் காதல்" அநாதையாகிவிடாது... கவலைப்படாதே!!!

நீயில்லையென்றால்...

தூக்கமில்லாத இரவுகளோடு போராடித் தோற்றுப்போனபோதும்
கனவுகளுக்கு ஏங்கிய இரவுகள் அதிகம்!
நினைவுகளும் ஞாபகங்களும் ஒவ்வொரு இரவிலும் என்னைக் கொன்று போட்டாலும், உன் நினைப்புடன்தான் உயிர்க்கின்றேன் அதிகாலைகளில்...!
இப்பொழுதெல்லாம்...  அதிவிரைவுச் சாலைகள் எனக்கு ,
பழக்கப்பட்ட ஒழுங்கைகள் போல இருக்கிறது !
வேகங்கள் என்னைப் பயமுறுத்துவதில்லை!
சதா ரணமுமாய் சாவதைவிட செத்துப்போனால் பரவாயில்லை 
என்று தோன்றும்போது,
சில அசாதாரணங்கள் கூட....
சாதாரணமாய் மாறிவிடுகின்றனவோ ?
நான் செத்துத் தொலைந்தால் நன்றாய் இருக்கும்!

22 ஜூலை, 2011

உண்மையான நட்பு

நீ அழும்போது தன் தோள்கொடுக்கும் ....சாய்ந்து கொள்ள!
உனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே...
உன்னைவிட அதிகமாய் அழும் உள்ளுக்குள்ளே!
நீ சிரிக்கும்போது ... தூரத்தில் நின்று பார்த்துமகிழும்...!
உன்னைவிட அதிகமாய் சந்தோசப்படும் மனதுக்குள்ளே!


நீ விழும்போதெல்லாம் உன்னை தூக்கிநிமிர்த்தும்!
தவறும்போது வழிகாட்டும்!  மீறும்போது கண்டிக்கும்!
பிரியும்போது வாடும்... சேரும் போது மகிழும்!
எதையும் இழக்கும்... எதையும் கொடுக்கும்!
எங்கிருந்தாலும் வாழ்த்தும்!

இறுதிவரை...  உன்னைவிட உன்னை அதிகமாக நேசிக்கும்!
 

மீண்டும் பார்ப்போம்....!

பிரிவுகளும் இழப்புக்களும் அடிக்கடி வந்து பழக்கப்பட்டதென்றாலும்,
வலிகளும் வேதனைகளும் சர்வசாதாரணமென்று நினைத்தாலும்,
மீண்டும் பார்ப்போம்... என்ற நம்பிக்கையில் பிரியும் போதும் கூட,
விழியோரத்தில் கசியும் நீர்த்துளிகள் ...
கட்டுப்பாட்டை மீறும் தருணங்கள்,
கேள்விகள் கேட்டு நிற்கின்றன.....  இது உனக்குப் புதியதா?... என்று !!!

தற்காலிக நியதிகள்

சேர்வதும்... பின் பிரிவதும்...; பிரிந்து பின் கூடுவதும்...;
சுழலும் உலகோடு வாழ்க்கையும் அதனூடான உறவுகளும்;
கட்டாயத்தின் பேரிலோ... எதனாலோ...
அப்படியே நகர்கின்றன கடிகார முட்கள்...!!!

21 ஜூலை, 2011

ஒற்றைப்பனை

எங்கள் ஊர் மண்ணில் நிமிர்ந்து நின்ற
ஒற்றைப் பனைக்குக்கூட வட்டில்லை!
அதனால்தானோ என்னவோ;
நாம் இன்று புலம்பெயர் மண்ணில்!

மாறுபடும் மனிதங்கள்

"மனிதம்" என்பதை உடைத்தெறிந்த "இனப்பாகுபாடுகள்" வராமல் இருந்திருந்தால் எவ்வளவோ...  நன்றாக இருந்திருக்கும்!
ஆனால், இப்பொழுது... தன் இனத்துக்காக மட்டும்,

வாழ்வதை, போராடுவதைத் தவிர வேற்று வழியில்லாத 
ஜீவராசிகளாக... மனிதர்கள்!             -தக்கன பிழைக்கும்!!!

என் கனவுப் பொழுதுகள்

நேற்றிரவு ஒர் கனவு கண்டேன்- அதில்,
நானும் அவளும் அவ்வளவு அன்னியோன்யமாய்...!
நீண்ட நாட்களின் பின்.... இருவரும்
ஒன்றாய் அமர்ந்து உணவுண்ட மகிழ்ச்சி!
காதலையும் காமத்தையும் தாண்டிய ஒரு உன்னத உறவு
நமக்குள் இருப்பதாய்... புரிந்துகொண்ட கனவுப் பொழுதுகள்!
கணப்பொழுதுகளில் நகர்ந்ததாய் உணரப்பட்ட - அந்த
இதயத்தின் இனிமையான நிலநடுக்கத்தினை
இன்னும் வேண்டும் என வேண்டியபடி
மீண்டும் என் கனவுலகை நோக்கி..... நான்!!!
என்று நனவாகும் என் கனவு!?

தூக்கமற்ற இரவுகள்

தற்காலிக மரணங்களை வென்று தொலைத்த இரவுகளில்...
உன்னைக் காணும் கனவுகளின்... நஷ்டங்கள் அதிகம்! 
அதன் கஷ்டங்கள் மட்டும்...    இன்றும் என்னோடு...!

செல்லக் கோபம்


உன் சின்னக் கோபங்களுக்குப் பதில்கள்...

பெரும்பாலும் என்னிடத்தில் இருப்பதில்லை!
உன் சொந்தங்களைத் தேடி...
நெடுந்தூரம்  போகவேண்டியிருக்கிறது - சமாதானப்படுத்துவதற்கு!!

சாது மிரண்டால்...

கண்ணீர்த்துளிகள் வற்றிப்போனால்....
மென்மையான கண்கள்கூட... தயாராகிவிடுகின்றன,
...............................................போருக்கு!!!!!!!!!!!!!!!

20 ஜூலை, 2011

தேவதையே...!

நீ சுவாசிக்கும் காற்றினைக் கொஞ்சம்...
என்  பக்கம் அனுப்படி!
என்  சந்தோசங்கள்  கொஞ்சம்
உயிர் வாழட்டும்!!

18 ஜூலை, 2011

என்னவள்

காதலும் கத்தரிக்காயும்... என்று சொன்ன                                                    சமுதாயக் கோட்பாட்டினை மறக்கவைத்து...
காதலையே என் தாரகமந்திரமாய் உச்சரிக்க வைத்தவள் இவள்!
செல்லமாய் வந்த என் சின்னத் தேவதை.....
என் இதயத்தினை கொள்ளைகொண்ட... இந்தக் கொள்ளைக்காரி!!!

முதற்கவிதை

நான் உச்சரித்த முதன்முதற் கவிதை...                           ஒரேயொரு வார்த்தையில் " அம்மா "  என்பதுதான்!
இன்னும் எத்தனை கவிதை எழுதினாலும்...
அத்தனை அழகு இதில் மட்டுந்தான்!