Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

29 ஏப்., 2014

காதலின் பெயரால்...



நம்பிக்கைகள் கைகோர்த்து நடக்க
எண்ணங்கள் இணையாக பிறக்க
பல வண்ணங்கள் இழையோடிச் சிறக்க
இரு உள்ளங்கள் உறவாடிப் பழகும்
இனிமையான காலத்தின் பெயர்தான் 'காதல்'


அப்படியான  இனிதான பொழுதுகளை
முன்னொரு நாளில்....
நீயும் நானும் பகிர்ந்திருந்தோம்!


காதலையும் அன்பையும்
அள்ளிக்கொடுத்த நீயேதான்,
பின்னொரு நாளில்....
பிரிவையும் வலியையும்
வாரியிறைத்துவிட்டுப் போனாய்!
நீ தந்துவிட்டுப்போன
அந்த வலிகளைத் தாண்டி வெளியேவர...
நான் பல  ஜென்மங்கள்
எடுக்க வேண்டியிருந்தது!


இன்னும் என் இரவுகள்...
என் தூக்கத்தை திருப்பித்தரவில்லை!
இன்னும் உன் ஞாபகங்கள்...
எனைத் தீயால் தீண்டுவதை நிறுத்தவில்லை!


வலிகள் ஒருவனை வலிமையாக்கும்!
எப்படியான துன்பத்தையும்...
புன்னகையோடு வரவேற்கும் வல்லமையை,
உன் துரோகம் தந்துவிட்டுப் போயிருக்கிறது!
இப்பொழுதெல்லாம் நான்...
கண்ணீரை வீணாக்குவதில்லை!!


கடந்து வந்த பாதைகள்...
எப்பொழுதும் நினைவில் இருக்கு!
நடந்து முடிந்த நாடகங்கள்...
இப்பொழுதும் மனதில் இருக்கு!


துரோகங்கள் மறக்கப்பட்டுவிடுமென
அதைச் செய்தவர்கள் நினைக்கலாம்!?
ஆனால்...ஏனோ தெரியவில்லை,
துரோகங்களை மட்டும்
இலகுவில் மறக்கமுடிவதில்லை..!
மன்னிக்கவும் முடிவதில்லை!!
'மன்னித்து விடலாம்' எனச் சொல்லும்
அதே மனதுதான்.... மறக்கவும் மறுக்கிறது!


ஒரு சாதாரண மனிதனின் வாழ்வை...
சதா   ரணமாக்கி இருக்கிறாய்!
உயிரோடு வாழும்...
பிணமாக்கி இருக்கிறாய்!
உன் துரோகங்களுக்குத் தண்டனையை
நான் கொடுக்கப்போவதில்லை
அதை உன் மனச்சாட்சியே பார்த்துக்கொள்ளட்டும்!


ஆனால்....
எனக்கென்று ஒருநாள் வரும்
உனைக் காண!
நிச்சயமாக.... அந்தநாள்,
உனக்கானதாக இருக்காது!


********   ********   ********   ********   ********

14 ஏப்., 2014

எண்ணிரெண்டு வயதில்...




பதின்மங்களின் படிமக்கனவுகள்;
புதினங்களாய்  பேசிக்கொள்ளும்
இரகசிய  வார்த்தைகள்;
இளசுகளின் சுத்தல்களில்
பெருசுகளுக்குப் புரியாத
தலைமுறை வளர்ச்சியின்
வழக்கமான அதே காதல்!

எப்போதும் புத்தம் புதிதாய்
மின்னும் எண்ணங்களுடன்
தோன்றும் மின்னல்கள்!
மின்சாரம் இல்லாத ஊரில்
மனசுக்குள் விளக்கெரியும்!
இரு ஜோடி இதழின் அழுத்தத்தில்
பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்!


முதல் முத்தம் எப்பொழுதும்
தலைக்கேற்றும் பித்தம்!
முதன்முதற் காதல்....
காலத்தால் அழியாத
இதயத்தின் மோதல்!
சூரிய உதயங்கள் வரை
வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த
வாலிப பருவத்தின்
வலிந்த போர்க்காலங்கள் !


கருவேப்பிலை மரத்தைக்கூட
பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து
நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து
பார்வையாலே பேசிக்கொண்டு
மனப் போர்வைக்குள்ளே ஒளித்தபடி
ஊரறியாமல் உலகறியாமல்
உற்றவர் யாருமறியாமல்...
சந்திக்கும் அரிதான பொழுதொன்றில்,
பத்து விரல் பற்றுகையில்...
பக்கென்று பற்றிக்கொள்ளும்
பதினாறு  வயசல்லவா அது!

   

எண்ணிரெண்டு வயதில்...
கண்ணிரெண்டில் கலக்கம்!
கன்னியவள் மனதில்...
துளிர்க்குது மயக்கம்!
காதலின் கிறக்கம்...
இன்னுமேன் தயக்கம்!


முதல் காதல்;
முதல் முத்தம்;
இன்னும் பல...!!!


பெரும்பாலும் ,
அந்த வயது அனுபவங்கள்
அனைவருக்கும் பொதுவானவை!
மீண்டும்,
மீட்டிப்பார்க்கும் நினைவுகள்
எப்பொழுதும் இனிதானவை!


:wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub: :wub:

விடுமுறை விதிமுறைகள் !


(: திருமணமானவர்களுக்கு மட்டும் :) 

 %%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

குறுக்குக் கட்டி  நீ குளிக்கையிலே...
குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு!
குறும்புக்காரன் மனசுக்குள்ளே...
குறுகுறுக்குதடி வயசு!


தலைக்கு சீயாக்காய்  தேய்ச்சு
சிகைக்கு சாம்பிராணி காட்டி
நீ குளிச்சு முடிந்தபின்னும்,
எனக்கு முடியவில்லை!
என் இதயம் படியவில்லை!!


புது உடையுடுத்தி வந்த பின்னும்
என் படையெடுப்பு அடங்கவில்லை!
மடையுடைத்த எண்ணத்தில்...
தடையுடைக்கும் திட்டத்தில்
என் கவனமெல்லாம் உன்னிடத்தில்
உன் கவளம் போன்ற கன்னத்தில்!


சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே,
சமைந்தவள் உனைப் பார்க்கையிலே...
என் சிந்தனையும்   சமையுதடி!
எண்ணெய்  ஊற்றாதே...!
என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!!

சாமி சிலை  முன்னாடி
சாந்தமாய்த்தான் தெரிகிறாய்!
திரைச்சீலை பின்னாடி
காந்தமாய் ஏன்  இழுக்கிறாய்!?


ஒரு நாளில் எத்தனை தடவையெனை
தவணைமுறையில் சாகடிப்பாய்?
விடுமுறை நாளில்கூட
விட்டுக்கொடுக்க மாட்டாயா?!
பிடிவாதக்காரி நீ....
பிடிகொடுக்க மாட்டாயா?!


கொஞ்சம் விட்டுக்கொடுடி கொஞ்ச(ம்)
இப்பவே வேண்டும் எனக்கு மஞ்சம்
விடுமுறை நாளென்றால்
துயிலறைக்கில்லை அது!
படிமுறை விதிமுறை எல்லாம்
இல்லறக் காதலுக்கு இல்லவேயில்லை அது!


எல்லை மீறி வாறன்!
உன்னையே தாயேன்...!!
விதி மீறத்தான் போறன்!
கதி நீயென்றே ஆவேன்...!!


வேண்டாமென்று சொன்னாலும்...
சும்மா நான் விடமாட்டேன்!
'சீ போடா' என்று செல்லமாய்...
நீ திட்டினாலும் விடமாட்டேன்!!


கட்டியவளை கட்டிலிலே
கட்டிக்கொண்ட பின் தொட்டிலிலே....
எட்டிப்பிடிக்கும் பிஞ்சு விரல்கள்
சுட்டிக்காட்டுது  நெஞ்சி (இ)ன் காதலதை!


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கல்யாணம் 2 காதல்


கொஞ்சங் கொஞ்சமாய்க் கொள்ளை அடிக்கிறாள்!
என் மனசுக்குள்ளே வெள்ளை அடிக்கிறாள்!
வண்ணங்களை அள்ளித் தெளிக்கிறாள்!
 
என் எண்ணங்களைக் கிள்ளி எடுக்கிறாள்!

மீண்டுமொரு புயல் வருதா?
உயிரோடு சாகடிக்க!
இன்னுமொரு முறை வருதா?
காதலித்துப் பேதலிக்க!


நல்ல மாட்டுக்கு ஒரு சூடு - அதுபோல
நொந்த மனசுக்கு ஒரு காதல்!
தோல்விகள் தருவது... வலிகளை மட்டுமல்ல,
நல்ல அனுபவங்களையும்தான்!!


காதலித்துத்தான் கட்டுறாங்கள்...!
பிறகேன்... சத்தம் போட்டு கத்துறாங்கள்?!
காதலித்தபோது இருந்ததெல்லாம்,
கல்யாணத்தோடு காணாமல் போச்சா?!

அவளைத் 'தேவதை' என்றவன்- இப்போது
'அவளே தேவையில்லை' என்கிறான்!
இவளே என் வாழ்வென்றவன் - இனி
வாழ வழியில்லையென பிரிகின்றான்!


காதல் எங்கே போச்சுது?
அதுக்கு என்ன ஆச்சுது?
காதல் தானே சாய்ச்சுது?
இப்ப என்ன பேச்சிது?


தாலிக்கயிறு ஏற்றும் வரை...
காதல் தூக்கில் தொங்க மாட்டேன்!
கல்யாணம் கட்டும் வரை...
அதை எட்டிக்கூட பார்க்கமாட்டேன்!


தாலி கட்டிக் காதலிப்போம்!
தாயைப்போல நேசிப்போம்!
காதலைத்தான் யாசிப்போம்!
இல் வாழ்வுதனைப் பூசிப்போம்!


திருமணத்தால் இணைந்து
இருமனதால் கலந்து...
ஒரு மனதாக,
கல்யாணத்தின் பின் காதல்,
கல்லறை வரைக்கும்....
தொடரும் வாழ்தல்!


மீண்டுமொரு முறை அவள் பெயரை
அனுமதியின்றி உச்சரிக்கின்றேன்!
ஏய் தேவதையே....!
நிறைய காதலிக்க வேண்டும் காத்திரு...!!
நம் கல்யாணம் முடியட்டும்...!!!

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு :

'திருமணத்தில் முடிவது' என்பதுதான் 'காதலின் வெற்றி' எனக் கருதுவது மிகத்தவறானது. பல காதல்கள் கல்யாணத்தின்பின் காணாமல் போய்விடுகின்றன.
 'காதல்' என்பது வாழ்வின் இறுதிவரை வரவேண்டியது. திருமணத்தின் பின்னர் இன்னொரு பரிமாணத்தை அடையும் காதலையும்... காதலோடு காதலிக்கத் தெரிந்தவர்கள்தான்............
காதலிலும் ஜெயிக்கின்றார்கள்...! வாழ்க்கையிலும் ஜெயிக்கின்றார்கள்...!!

'விவாகரத்து' எனும் 'Divorce'

tblfpnnews_3103274107.jpg

ஆணைப் படைத்தான்...!
பெண்ணையும் படைத்தான்...!!
இயற்கையை படைத்து...
அவர்களை இயங்கவும் வைத்தான் !!
அந்த வித்தைகாரன்  பெயர்தான்  - கடவுள் !!!

ஆணுக்கு பெயர் வைத்தான்,
அது   'கணவன்' !
பெண்ணுக்கு பெயரிட்டான்,
அது   'மனைவி' !
இருவரையும்....
சேர்த்து வைக்க திட்டமிட்டான்
அது  'திருமணம்'  !!


அத்தோடு விட்டானா....?!!
'காமம்' என்றும்...
'காதல்' என்றும்...
எதிரும் புதிருமாய்,
எதையெதையோ வைத்தான் ...
அதன்  இடையில்!!!

'ஆசை அறுபதுநாள்
மோகம் முப்பதுநாள்'

அப்படியொரு பழமொழியை...
எவன் வைத்தான்... தெரியவில்லை!?
தொண்ணூறு நாளின் பின்தான்,
பெரும்பாலும்...
தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!!

எல்லையில்லா அன்பென்றார்...!?
தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!!
பிரியமாக இருந்தோரெல்லாம்...
பிரிவோமென்றே பிரியப்படுவார்..!!
புரிதல் இல்லை!
பரிவும் இல்லை!
'காதல்' என்றால் என்னவென்று...
போதுமான விளக்கம் இல்லை!


குடும்பமென்றும்... குழந்தையென்றும்...
ஆனபின்னும் ஆணவத்தில்,
ஆளுக்காள் அடம்பிடித்தால்...
ஆகுமினி இப்படித்தான்...!

திருமணங்கள் மட்டும்
அங்கு முறிவதில்லை,
இரு மனங்களுந்தான் எரிகிறது!

கடவுள் சேர்த்து வைக்க...
மனிதன் பிரித்தானா? - இல்லை,
மனிதன் சேர்ந்து வாழ...
கடவுள் பிரித்தாரா? -தெரியவில்லை!

ஆனால்,
ஒன்றுமட்டும் உண்மை...
'விவாகரத்து' என்று ஒன்றை,
மனிதன்தான் கண்டு பிடித்தான் !!!


# 99% ஆன விவாகரத்துக்கள் தவிர்க்கப்படக் கூடியனவாகவே  இருந்திருக்கிறது.... இருக்கிறது. ஆனால், மனிதர்கள் அதனை அமுல்படுத்த விரும்புவதில்லை #  :(

கள்வனின் காதலி




யார் வீட்டுப் பிள்ளை இவள்?
அடி பெருத்து...
இடை சிறுத்து...
வளர்ந்து நிற்பவளின்....
அழகு மேனியில் தெரிகிறது,
பருவ வளர்ச்சியின் படிமங்கள்!


அவளின் பருவக் குலையைப்
பார்க்கப் பார்க்க...
தாகம் எடுக்கிறது தானாக...!
தேகச்சூடு அடங்கும்வரை
பருகவேண்டும்

அவளின் இள நீரை!
வீசுகின்ற காற்றிலே அழகாய்
மெல்ல மெல்ல அசைகிறது
அவள் பச்சைக் கூந்தல்..!
இளங்குருத்தின் வாசம் வந்து
வெட்கத்தோடு அழைக்கிறது
ஏறி வா என்று...!


அவள் இடை அணைத்து...
அவளுடல் மீதேறி...
யாரோ கட்டியதை
திருட்டுத்தனமாய்...
மெல்ல அவிழ்த்திறக்கி
சத்தமின்றி  மொத்தத்தையும்
ரசித்து...குடித்து...வெறித்து....
திகட்டும் போதையில் திளைத்து,
பின் களைத்துப் போக.....
அவள் தோப்பில் அவளோடு,
கொஞ்ச நேரம் தூங்கினாலும்,
அதுவல்லோ   சுகம்...!!!


~~~~~       ~~~~~      ~~~~~      ~~~~~

குறிப்பு :
பல வருடங்களுக்கு முன்னர் நண்பர்களோடு திருட்டுத்தனமாக தென்னந்தோப்புகளில் இளநீரையும், யாரோ கட்டிவிட்ட முட்டியிறக்கி  தென்னங் கள்ளினையும்
குடித்து மகிழ்ந்த பழைய ஞாபகங்களோடு,    கொஞ்சம் காமரசம் கலந்து :wub: ..... கள்வனின் காதலியாக!!! :wub: :lol:

ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும்...

324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 

 

சில வேளைகளில்....
சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட
காதல் தொற்றிக்கொள்கிறது!
அதன்  இனிய நினைவுகளால்...
மனம் கொஞ்சம்... தன்னைத்தானே  தேற்றிக்கொள்கிறது!!

காத்திருப்புக்களும் சந்திப்புகளும்
கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்....
அந்த தேநீர்விடுதி!
வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும்
அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...!
காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில்
அதற்கும் கொள்ளைப் பிரியம்...!!
அங்குள்ள பணியாளரைப்போலவே
இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!!


அவளுக்காகக் காத்திருந்த
பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....!
அவள் வரும்போது...
வண்ணங்களையும் வாசனையையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறாள்!
திடீரென்று எல்லாமே..... அழகாக மாறும் மாயம்,
அங்கேதான் நடந்திருக்கிறது!!
காற்றிலாடும் அவளது துப்பட்டா....
வண்ணத்துப்பூச்சிகளை பறக்கவிட்டுக்கொண்டே இருக்கும்!
 

சூடாறிய தேநீர் அப்படியே காத்திருக்க...
ஆறுதலாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தன
மெளனங்கள்!
அங்கு....
தேநீர் எப்பொழுதும் இனித்ததில்லை!
குடித்துத் தந்த மீதித் தேநீரில்...
நிறையக் காதலும் கலந்திருந்தது..!
இனியவள் அருகில் இருக்க...
இனிப்பாக வேறெதுவும் இருந்ததில்லை...!!


மென்மையை ரசிக்க ஆரம்பித்ததே
அவள் மென்கரங்களில்தான்! -நான்
பெண்மையை ரசிக்க ஆரம்பித்ததும்
அவள்  நாற்குணங்களில்தான்!!
ஒரு தேவதையை அருகில் உட்காரவைத்து
தேநீரையும் அன்பையும் பரிமாறியபடியே
கழிந்த பொழுதுகள் இனிமையானவை!

கடிகாரம் மீது பலதடவை கோபித்துக்கொள்வதும்,
கடுகதி வேகத்தில் சுற்றும்... முட்களைப் பார்த்து முறைத்துக்கொள்வதும்,
ஐந்தைந்து நிமிடங்களால் பிரியாவிடைகளை தள்ளிப்போடுவதும்,
'இன்னும் கொஞ்சநேரம்.....' என கெஞ்சிக்கொள்வதும்,
அப்போதைய அன்றாட அனுபவங்களாய்....
இருவரையும் ஆக்கிரமித்திருந்தன!


பிரிவுகள் மீண்டும் சந்திப்பதற்காய் அமையும்வரை...
அவை தற்காலிகமானவைதான்...!
இனிமையானவையும்கூட..!! - ஆனால்
நிரந்தரமான பிரிவுகள்...
சில இடங்களையும் பல சம்பவங்களையும்
ஒன்றுமில்லாத வெறுமையாக்கி விடுகிறது.

மீண்டும்.... அந்த தேநீர்விடுதியையும்
வெறுமையான அந்த நாற்காலிகளையும்
தனியாக பார்க்கும் திராணியற்ற மனதினை
அதன் இனிய நினைவுகளால்
கொஞ்சம் தேற்றிக் கொள்கிறது மனசு!


காதலைப்போலவே... அதன் நினைவுகளும்
மாயங்கள் செய்யும்!
காயம்பட்ட  மனதிற்கு..... மனமே
மருந்து போட்டுக்கொள்ளும் மாயத்தினை,
காதல்நினைவுகளால் மட்டுமே நிகழ்த்த முடிகிறது...!!!


*****     *****     *****     *****     *****     *****     *****     *****     

hotel-omega-inn.jpg

நீண்ட நாட்களின் பின்னர்  அந்த தேநீர் விடுதியின் படத்தினை தற்செயலாக மீண்டும் பார்க்க நேர்ந்தபொழுதில்....
மனதில் தோன்றிய கிறுக்கல் ( சனிக்கிழமை இராப்பொழுதில் திராட்சை இரசத்தை பருகியபடி~~~ ) :wub: :rolleyes:

 

மீண்டுமொருமுறை வந்துவிடாதே...!!!


ஒரு மார்கழி இருபத்தாறில்தான்,
பேராறுபோல் பெருக்கெடுத்தாய்....
எம்  ஊருக்குள்ளே!
பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை...
நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்!

சொல்லாமல் கொள்ளாமல் வந்து,
எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..!
இத்தனைநாளாய் உன்னில்
அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம்,
ஒற்றைநாளில் மொத்தமாய்
நீ அள்ளியெடுத்தாய்..!!
கடல்தாயே... மறந்துவிட்டாயா?


சுனாமியென்றால் எமனின் பினாமியென்று
அன்றைக்குத்தான் தெரியும்!
என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...!
அன்றுதான்  உன்னைத் தூற்றினோம்...!!


என் பாட்டன் உன்மேல் வலைவீசினான்,
என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான்,
எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது?
நீ அலையலையாய் அடிக்க...
நுரைக்குமிழி பிடித்து விளையாடிய  பிஞ்சுகளையும்
அலையோடு அழைத்துச்சென்றதேனோ?


உன்னைத்தானே தெய்வமென்றோம்!  -அதற்கும் மேலே,
உன்னைத்தானே தாயுமென்றோம்!!
எம்  பிஞ்சைக்கூட  
வஞ்சம் தீர்த்தாய்... ஏன் தாயே?!


செத்து  மிதந்தது  யேசுபாலன் சிலைகள் மட்டுமல்ல,
எம் பாலகரும்தான்...!
பாலூட்டிச் சீராட்டி  வளர்த்த பாலரையெல்லாம்
நீராட்டி அழித்தாய்... ஏன் தாயே?!


மீண்டுமொருமுறை வந்துவிடாதே..!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!
போரின் பசிக்கு... குடுத்தது போக,
மிஞ்சியிருப்பது... எம் கண்ணீர் மட்டுமே!
அதை வேண்டுமானால்,
உனக்கே  காணிக்கையாக்குகின்றோம்!


மீண்டுமொருமுறை வந்துவிடாதே!
உன் கோரப்பசி தீர்க்க
எம்மிடம் எதுவுமில்லை...!!

__________
26-12-2013
 ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~  ~~~~~~~
     

                                          இக்கவிதையின் இசைவடிவம்: 
                                          ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~



உங்கள் துரோகத்திற்கு நன்றி...!


நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான்,
'துரோகம்' எனும் பரிசையும்...
புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது!

மனச்சாட்சிகள் எப்பொழுதும்
தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..!
அது... துரோகம் செய்தவரையும்
ஒருநாள் தட்டியெழுப்பும்..!!
காலம் கடந்த ஞானத்தால்...
கோலம் மாற்ற முடியாது!
காலைச் சுற்றிய பாம்பாக...
மனச்சாட்சியின் தொண்டைக்குழியை,
இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!!


துரோகத்தின் தடங்களில்...
அனுபவப்பாதை விரிந்து செல்லும்...!
தாங்களே பின்னிய வலையில்,
துரோகிகள் சிக்கித் தவிக்க...
மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்!
மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத,
தனித்த நீண்ட பயணங்களில்......
மாற்றங்கள் இருக்கும்...!
ஏமாற்றங்கள் இருக்காது...!!

இனிமையான பொழுதொன்றில்....
திரும்பிப் பார்க்கும் போது,
ஏறிவந்த படிக்கட்டுகளாய் துரோகங்கள்,
எங்கோ தொலைவில்... கறுப்பு வெள்ளையாய்!
வலிகளை வழிகளாக்கி...
துரோகங்களையும் அனுபவங்களாக்கி...
வாழ்க்கையினை வண்ணங்களாக்க உதவிய...
துரோகங்களுக்கும்... அதைப் பரிசாகத் தந்தவர்களுக்கும்,
ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும்!!!


துரோகத்திற்கு நன்றிகள்..............!
உங்கள் துரோகத்திற்கு நன்றிகள்.......!!


#############################################

~~~ ஒரு கடற்கரை மணல் மீதான கிறுக்கல்கள் ~~~


கரைமணலைத் தொட்டுத்தொட்டு விளையாட...
நுரையலைகள் விட்டுவிட்டு அலையாட...
திரைகடல் மெட்டுப்போட்டு இனிதான,
திரைப்பாடல் ஒன்றின் முதல்வரியை ஞாபகமூட்டும்!

மெதுவாய் வீசுகின்ற உப்புக்காற்றின் ஈரம்,
பக்கம்வந்து பேசுகின்ற வார்த்தைகள்...
முன்பொருநாளின்  மாலைப்பொழுதில்
அன்போடு மணல் அளைந்த
இருபது விரல்கள் பற்றிய கதை பேசும்!


உப்புக்காற்றில் உலர்ந்துபோன
இருஜோடி இதழ்கள்
காதலின் பருவமழையில்
முழுதாக நனைந்துபோக...
செக்கச் சிவந்த வானம்கூட
அவளின் கன்னம் பார்க்க வெட்கப்பட்டு
மேகத்தை அள்ளிப் போர்த்துக்கொள்ளும்!

மெளனங்கள் பேசிக்கொள்ளும்
ரம்மியமான  மாலைப்பொழுதில்
விரிந்த கடலுக்கும் வானத்துக்கும் இடையே
எதிர்காலக் கனவுகளை
திரையிட்டுப் பார்த்துக்கொள்ளும்.... இரு மனசுகள்!


அவன் தோளில் சாய்ந்தபடிதான்...
அவளுக்குப் பேசப்பிடிக்கும்!
பிறக்கப்போகும் முதற் குழந்தையிலிருந்து,
பேரப்பிள்ளைகள் வரைக்கும்...
நிறையக் கதை பேசுவாள்!
குழந்தைத்தனமாக அவள் சொல்லிக்கொண்டிருந்தால்,
கேட்டுக்கொண்டே இருக்கலாம்...!
அத்தனை இனிமையாயிருக்கும்...!!

எட்டிப்பார்க்கும் நிலாப்பெண்ணை,
ஒட்டிநின்று ஓரக்கண்ணால் ரசித்தபடி...
விட்டுச்செல்ல மனமின்றி,
மெல்ல அகலுவான் பகலவன்!
அவள் விடைபெறும் வேளைகளில்...
அவனும்  அப்படித்தான்...!!


அவனுடைய மாலைப்பொழுதுகளை...
தன்னுடன் இனிமையாக்கிய தேவதை அவள்!
"தேவதைகள் தோன்றி... பின் மறைந்துவிடுவார்கள்"
அப்படித்தான் அவளும் !
திடீரென்று ஒருநாள்,
சொல்லாமல் கொள்ளாமல் மறைந்து போனாள்!

மறைந்து... மறந்து....
இத்தனை வருடங்கள் ஆகியும்
மணல் மீது அழியாமல்
அப்படியே இருக்கின்றன காற்றடங்கள்!
வழக்கமான அந்த இடத்தில்
அத்தனை நினைவுகளும்....
குவிந்து கிடக்கின்றன மணல்மேடாய்!


 

மணல்வீடு கட்டி விளையாடும்
சின்னக் குழந்தைகளை பார்த்தபடி,
தனியாக ஒருவன்........
அக்கடற்கரையின் மணற்பரப்பில்,
ஒரு தேவதையின் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறான்!
கடலலைகள் ஓயாமல்
அதனை... அழித்துக்கொண்டே இருக்கின்றன...!!!


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குறிப்பு:
இக்கவிதையின் ஒலிவடிவம் "இசைக்கவிதைகள்" பகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது

13 ஏப்., 2014

அயல் வீட்டுக் கயல்விழி...


விரிந்து கிடக்கும் பூக்களில்
தேன் குடிக்கும் வண்டினைப்போல்...
திறந்து வைத்த ஜன்னலோரத்தில் நான்!!!
அதிசயம் ஆனால் உண்மை...!
பக்கத்து வீட்டில்தான்
பால்நிலா வசிக்கிறது!!!


நிலவுக்கும் எனக்குமான
சில அடி தூரங்களும்
பலகோடி ஒளியாண்டு
இடைவெளியாய்த் தெரிகிறதே!!!
இத்தனை நாளாய்ப் பார்க்காமல்
எத்தனை அமாவாசைகளை கடந்திருப்பேன்!!!

ஏய் நிலவே...!!!
பறந்து போகும் என் எண்ணங்களுக்கு
சிறகுகளை இலவசமாய்...
நீதான் கொடுத்தாயோ???
மொத்தமாய் மறந்துபோகிறேன்
என்னை நானே..!!!



வீசுகின்ற பருவக் காற்றை
நீதான் அனுப்பி வைத்தாயோ???
மெதுவாய் என் பக்கம் வந்து
உன் பருவத்தின் வாசனையை
பக்குவமாய்ச் சொல்லுதடி!!!



அங்கே நீ எட்டிப் பார்த்துச் சிரிக்கையிலே
இங்கே கூடுவிட்டு நழுவுதடி என் இதயம்!
உன் கன்னக் குழியில் தவறி விழுந்து,
உன் நெஞ்சத்தின் உச்சிவரை...
துள்ளி எழும்புதடி என் ஆசைகள்!!!

என் அயல் வீட்டுக் கயல்விழியே...!
இராமுழுதும் கனாக்களோடு களைத்துவிட்டேன்...!
அதிகாலையிலும் என்னை அலைக்கழிக்காதே...!!

கொஞ்சம் வந்து நில்லடி
உன் ஜன்னலோரம்...!!!
கழுவாத முகத்தோடும் களையாக இருக்கும்
உன் வதனம் பார்க்கையிலே...
பால்நிலவைப் பார்த்து
நிலாச் சோறுண்ணும் குழந்தையாகிறேன்!!!


**********************************************************

முக்கிய குறிப்பு:

பக்கத்து வீட்டில்  ஒரு அழகான பொண்ணு இருந்து.... அந்தப் பொண்ணை 'சைற்' அடித்து  'றூட்டு' விடும் பெரும்பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.  :lol:  (எனக்கு ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன் கிடைத்தது -அது ஒரு கதை) :wub: :lol:

அந்தப் பெரும்பாக்கியம் கிடைத்த பாக்கியவான்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்...!!!

தேன் நிலவு ~ காமரசம்


பாற்கடலில் பாவை குளிக்க
அதைப்பார்த்துக் கண்கள் களிக்க
நனைந்த தேகத்தில் அங்கங்கே
மின்னிச்  சிரிக்கின்றன மொட்டுக்கள்!


மெல்ல மெல்லப் பாலாடை விலக
சின்னச் சின்னதாய் சிந்தனை சிதற
முழுதான நிர்வாணத்தின் அழகில்
சொக்கிப்போகிறது மனசு!

பாவையவள் பார்வையாலே
எட்டிப்பார்க்கிறது அந்தரங்கம்!
ஒளிந்து கிடந்த ஒற்றைத் தென்னைகூட
இப்பொழுது ஒளிர்ந்து எழுந்திடுதே!


கொஞ்சங்கொஞ்சமாய் முன்னேறி
தன் அவசரத்தைக் காட்டுகிறாள்!
ஜன்னலைத்  திறந்துவைத்தால்
என்  கட்டில் வரை வருவாள்!


காலையில்,  அவள் கணவன் வரும்வரைக்கும்,
என் இரவு.... இவளோடு கழியும்!
அழகான,    இவள் தேகம் புணர்வதினால்
என்  இதயம்.... இதமாகக் களிக்கும்!


காலடியில் கிடக்கும் ஈரமான புல்வெளியை
காலையில் பார்க்கும்போது...
நேற்றைய இரவை அவளோடு களித்ததும்
நீங்காமல் நினைவில்வரும்!


மீண்டுமவளைப் புணர்வதற்கு...
இன்னுமொரு பெளர்ணமி இரவுக்காய்
காத்துக்கிடக்கின்றன கண்கள்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கனவில் வந்து போறவளே...!





ரொம்பக் குளிருதடி...
கொஞ்சம் பாரேன்டி!
தேகம் நடுங்குதடி...
பக்கம் வாயேன்டி!


வெள்ளை நிறத் தேவதையே...
வண்ண முலாம் பூசுறியே!
கிட்ட வந்து முட்டுறியே...
தட்டி விட்டுப் போகிறியே!


தொட்டுப் பார்க்க முன்னால...
கட்டிப் போடுறாய் கண்ணால!
ஓரங்கட்டுறாய் தன்னால...
ஒண்ணும் முடியல என்னால!

கண்ணைச் சிமிட்டாதே...
கடித்துக் குதறுதடி!
என்னை மிரட்டாதே...
எண்ணம் சேர்ந்து மிரளுதடி!


என்னைத் தூண்டி இழுக்கிறாய்...
எல்லை தாண்ட அழைக்கிறாய்!
இன்பத் தொல்லை தருகிறாய்...
தீண்டும் முன்பே மறைகிறாய்!


வண்ணம் தந்த வானவில்லே...
எங்கேயுன்னைக் காணவில்லை!
கனவில் வந்து போறவளே! -உன்
நினைவில் நொந்து போகிறேன்டி!


%%%%%%%%%%%%%%%%%%%%%%% 

வடக்கிலிருந்து சூரியன் உதிக்கிறது...!?




சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி
நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...!
கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து
விளையாடும் பால்நிலவைப் பார்த்து
தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...!
பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது
காற்றடிக்கும் போக்கில்
இங்குவரை கேட்கிறது...!


நேற்று இங்கு நடந்ததை
எத்தனை தடவைதான்
நினைத்து நோவது...?!
அப்படியே தூங்கிவிட்டேன்...!
எனக்குத் தெரியும்...
நான் தூங்குகின்றேன்...
அதை உணர முடிகிறது என்னால்!
கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன...

குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்...
இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!?
நிலவொளியின் வெளிச்சத்தில்
நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்!
சவுக்கு மரக்காடுகளின் நடுவே...
சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்து
முன்பொருநாள் புதைந்துபோன
கரிகாலச் சோழனின் போர்வீரர்கள்
குதிரையில் வருகிறார்கள்!
கனவிலும் மனம் பூரிக்கிறது...!
ஆஹா... விடுதலை !!!


இப்பொழுது எழுகிறேன்...
ஏனென்று தெரியவில்லை!
குதிரைகளையும் காணவில்லை...!!!
என்னால் உணர முடிகிறது!
இன்னும் விடியவில்லை!
பாலுக்கழுத குழந்தை
இன்னும் அழுகையை நிறுத்தவில்லை...
அதே காற்று... அதே சத்தம்!
நரிகளின் ஊளைச் சத்தத்தில்
என் தூக்கம் கலைந்திருக்கலாம்!
ஏதோ ஒரு கனவு கண்டதாய்
ஞாபகம் வருகிறது
அதை நினைக்கும் முன்பே...
வடக்கிலிருந்து சூரியன் உதிக்கிறது!
நான்...
விடிந்துவிட்டதாய் எழுந்து நடக்கிறேன்!!!


**********            **********            **********

நீ தந்த எழுத்தாணி!



கலைவாணி நீ தந்தாய் எழுத்தாணி..!
தலைவணங்கி வேண்டுகின்றேன் துணைவாநீ...!!

ஞாலத்தின் ஒளியாகி...
ஞானத்தின் வழியாகி...

முத்தேவிகளில் முத்தானவளே...!
முத்தமிழின் வித்தானவளே...!!

தாய்த்தமிழுக்காய் எழுதுகின்றேன் 

உனைத் தாயாகத் தொழுகின்றேன்! 
என் தயவாக நீயிருந்து - என்றும்
நான் தவறாமல் பார்த்துக்கொள்!
*****   *****   *****   *****   *****

தேவதைகள் வந்துபோன தேசம்...



எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
வந்தவர்கள்... வரம் கொடுக்க வரவில்லை...!
வாங்க வந்தார்கள்!!
தேவதைகளுக்கும் தேவை அதிகம்
தேவையில்லாமல் தேடி வந்தார்கள்!
அழைக்காமலேயே அன்பாய்(?) வந்தார்கள்!

வந்துபோனபின்... எம்மிடம்
மிச்சம் மீதியாய் இருந்ததையும்

அழிக்காமல் விட்டிருக்கலாம்...!!!
வரம் கொடுப்பதாய் சொல்லிக்கொண்டு
காட்சிதரும் தேவதைகளே!
பாவம் நாங்கள்...
சாபங்களை அள்ளியிறைத்துவிட்டுப் போகாதீர்கள்!!

போர் என்றும் சமாதானமென்றும்
போர்க்குற்றமென்றும் விசாரணையென்றும்
தீர்வென்றும் தீர்மானமென்றும்
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்!
எதுவுமே நடக்கவில்லை!

சாவின் விளிம்பில் நின்று கதறியபோது
சாப்பிட ஏதுமின்றி திணறியபோது
செல்வீச்சில் சின்னாபின்னமாய் சிதறியபோது
உறவுகளை பறிகொடுத்து பதறியபோது
உலகெங்கும் கேட்கத்தானே கூவியழைத்தோம்!
எங்கே போயிருந்தீர்கள்???
தேவதைகளே... உங்களைத்தான் கேட்கின்றோம்!
எங்கே போயிருந்தீர்கள்???

தோன்றுவதும் மறைவதும்
தோண்டுவதும் மறைப்பதும்
வருவதும் போவதும்
வரம் கொடுப்பதும் கொடுக்காததும்
எதைப்பற்றியும்...
இப்பொழுது நாம் நம்புவதில்லை... கவலைப்படுவதுமில்லை!
ஏனெனில்..
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!


இன்னும் எத்தனை தேவதைகள் வருவார்கள்?!
வரட்டும்... வரமோ சாபமோ
கொடுக்கட்டும்!!!
எதைப்பற்றியும் கவலையில்லை...!!!
ஏனெனில்,
எத்தனை தேவதைகள் வந்துபோனார்கள்
எதுவுமே நடக்கவில்லை...!
இதுவும் அப்படித்தான் !!!


########  ########  ########   #########   ########

 ( சர்வதேசத்துக்கான தேவதையின் இலங்கை வருகையினைக் குறித்து 03/09/2013 அன்று எழுதப்பட்ட கவிதை )

கொஞ்சம் நில்லடி கள்ளி...!


எந்திரமான எண்ணங்களுக்கு
தந்திரமாய் வண்ணங் கொடுக்கிறாய்!
பத்திரமான மனசுக்குள்ளே
சித்திரமாய் சிரிக்கிறாய்!

சொல்ல வரும் சேதி...
மெல்ல வந்து மோதி...
வெள்ளமாய் மேவி...
கள்ளமாய்த் தாவி...
செல்லமாய் நுழைகிறாய்!


வட்ட நிலா வானத்தில்
உன் முகமாய்த் தெரியுதடி!
கிட்டவந்து முற்றத்தில்
வானவில்லும் மிளிருதடி!


கதவடியில் நாய்க்குட்டி...
காலடியில் பூனைக்குட்டி...
அத்தனை காவலையும் தாண்டிவந்து,
கனவுக் கண்ணிகளை
என்  கண்களுக்குள் புதைத்துவிட்டு...
அப்பாவியாய்த்  தப்பிக்கிறாய்!


கொஞ்சம் நில்லடி கள்ளி..!
உன்னிடம் ஒரு கேள்வி...!!
என்னிடமிருந்து தூரமாய்...
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...???


~~~~~~  ~~~~~~~  ~~~~~~~  ~~~~~~~  ~~~~~~~