Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

7 மார்., 2012

எதைத் தேடி அலைவது....???


சட்டெனத் தூறிய மழைத்துளியில்,
முற்றாக நனைந்து போனேன்...!
சாயம் போனவன் போலாகி... - காயமாகி,

அம்மணமாய் அழுது நின்றேன்!

 
வழமையாய்... நான் பேசினால்,
பத்து ஊருக்கு பவ்வியமாய்க் கேட்கும்...!
ஆனால், பேச இயலாத ஒருவனாய்... - அகதியாய்,

எங்கேயோ தொலைந்து போனேன் ..!

 
என் தாயின் முகம் மலர...
மாற்று நாமம் சூடிக்கொண்டேன்!
பல முகமூடி போர்த்திக்கொண்டேன்...! - ஆனால்,

உண்மையான என் முகம் தொலைத்து நின்றேன்!

 
நெருப்பாய் இரு... எரிக்காதே!
கனலாய் இரு ...கருக்காதே!
கருத்தாய் இரு.... வருத்தாதே!!! - இறுதியில்,

அர்த்தமற்ற பிழையாய் ... நின்றேன் !



என் மானங்காக்க.... அழகாய் உடுத்திக்கொண்டேன்!
என் பெண்டிர் விருப்பம்போல்.... வாங்கிக் கொடுத்தேன்!!
ஆனால், என் தாயவள் கற்பிழந்து நிற்க....


என் கழுத்திறுக்கும் கருத்துக்களோடு...
நெற்றிப்பொட்டினை துளைக்கத் துடிக்கும் பேனா முனைகளோடு...
மற்றவர் முன் அம்மணமாய்.... அருகதையற்றவனாய்,

தரையில் விழுந்த மீனைப்போல...
பாழ்பட்ட வலையில்... பிடிபட்ட மீனாக...
துடிக்கத் துடிக்க... உங்களுக்கு விருந்தாகின்றேன்!
பசியாற நீங்கள்...... உண்ட உணவாகின்றேன்!

பயம் தொடாத நிலத்திலிருந்து.... பத்தும் பேசலாம்!
பத்து ஜென்மம் எடுத்தாலும்... பேசாத ஜென்மங்களும் ,
பாவம் பழி புரியாத ... பாக்கியசாலிகளும்,
பத்திரமாய்.... அங்கேதான் இருக்கின்றார்! என்ன செய்தார்???

நிஜம் என்பது எப்பவுமே சுடத்தான் செய்யும்!
சுட்டவரின் நிஜத்தினை .... சூடாய் வரிக்கத் தயங்குவதேன்?!


காலம் என்பது எம்மை, சிலமுறைதான்...... தன்பால் அழைக்கும்!
மறுபிறவியில் நீங்கள்... மாற்றினத்தில் பிறக்கலாம்!
இம்முறையேனும் நேர்மையாய் இருங்கள் ... உங்களுக்கேனும்!

உங்கள் உறவுகளின் அழுகுரலுக்கான ...
எங்கள் குரல்கள், எங்கே ஒளிந்துகொண்டன....???!


எதைத் தேடி அலைவது...???
அழிவுகளின் தடயத்தினையா? அல்லது... உங்கள் உரிமைக் குரலினையா?


தயவுசெய்து பதில் தேவை... !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக